SuperTopAds

நீதிமன்ற உத்தரவுப்படி காணிகள் விடுவிக்கப்படவில்லை!

ஆசிரியர் - Admin
நீதிமன்ற உத்தரவுப்படி காணிகள் விடுவிக்கப்படவில்லை!

முல்லைத்தீவு - மாந்தைகிழக்கு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட துவரங்குளம் மற்றும், அக்குளத்தின் கீழான வயல் நிலங்களையும் மக்களிடம் கையளிக்கும் விடயத்தில் நீதிமன்றம் உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு பிரதேசசெயலகமும், வனவளத் திணைக்களமும் தமக்கிடையிலான பிணக்குகளைத் தீர்த்து மக்களுக்குரிய குறித்த குளத்தையும் குளத்தின் கீழான வயல் நிலங்களையும் அவர்களிடமே கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

மாந்தைகிழக்குப் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் திங்கட்கிழமை (03) இடம்பெற்ற நிலையில் குறித்த கூட்டத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினரால் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

குறித்த துவரங்குளத்தின் கீழுள்ள வயல்காணிகளில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட 63விவசாயிகளுக்கெதிராக கடந்த ஒருவருடத்துக்குமுன்னர் வனவளத் திணைக்களத்தினால் நீதிமன்றில் வழக்குத்தொடரப்பட்டது.

அந்தவகையில் மங்குளம் நீதிமன்றில் இடம்பெற்ற இந்த வழக்கில், துவரங்குளம் மற்றும், இக்குளத்தின் கீழான வயல் நிலங்கள் எமது மக்களுக்கு உரியவை எனச்சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து வனவளத் திணைக்களத்தினால் வழக்குத்தொடரப்பட்ட விவசாயிகள் விடுவிக்கப்பட்டதுடன், இந்தவிடயத்தில் பிரதேசசெயலகமும், வனவளத் திணைக்களமும் தமக்கிடையிலான பிணக்குகளைத் தீர்த்துக் கொள்ளுமாறும் நீதிமன்றால் உத்தரவிடப்பட்டது.

இருப்பினும் ஒருவருடங்களுக்கு மேலாகியுள்ளபோதிலும் இந்த விடயம் தொடர்பில் இருதரப்புக்களும் தமக்கிடையிலான பிணக்குகளைத் தீர்த்து வயல்காணிகளையும், குளத்தையும் மக்களிடம் கையளிக்க இதுவரை எவ்விந நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இந்தவிடயத்தில் நீதிமன்றத்தினுடைய கட்டளை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றே சொல்வேண்டியுள்ளது. மக்களுக்குரிய இந்த வயல்நிலங்களும், குளமும் அந்த மக்களிடமே கையளிக்கப்படவேண்டும். தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள இந்த அரசாங்கம் இந்த விடயத்தில் கூடுதல் கவனமெடுக்கவேண்டுமெனத் தெரிவித்தார்.

இந் நிலையில் இந்தக்காணிகளை மக்களிடம் கையளிப்பதற்கு மேலதிக நடவடிக்கைக்காக இவ்விடயத்தை மாவட்ட அபிவிருத்திக்குழுவிற்கு சமர்ப்பிப்பதென இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.