400 கி.மீ வேகத்தில் பறக்கும் கார் - 2 ஆண்டுகளில் கொண்டுவருகிறது ரோல்ஸ்-ராய்ஸ்
முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் தனது பறக்கும் கார் திட்டத்தை அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் சாலைப்போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாகவும், சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுத்துவதாகவும், நேர விரயம் செய்வதாகவும் வேகமாக மாறிவருவதால் பல முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் பறக்கும் கார்களை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன.
இந்நிலையில், பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ்-ராய்ஸ், ஹெலிகாப்டரை போன்று செங்குத்தாக மேலெழும்பி, தரையிறங்கும் (EVTOL) மற்றும் அதிகபட்சமாக 400 கிலோமீட்டர் வேகத்தில் நான்கு அல்லது ஐந்து பேரை சுமந்துகொண்டு தொடர்ந்து 800 கிலோமீட்டர் தூரம் வரை பறக்கும் கார் தயாரிப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மின்சாரத்தில் இயங்கும் இந்த காரை வரும் 2020ஆம் ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவுள்ளதாக தெரிவித்துள்ள அந்நிறுவனம், இது தனிப்பட்ட, வர்த்தக, சரக்கு மற்றும் ராணுவ பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருக்குமென்று கூறியுள்ளது.