யாழ்ப்பாணம் - கொழும்பு குளிரூட்டப்பட்ட ரயில் சேவை 30ம் திகதிவரை தொடர்ச்சியாக இடம்பெறும்...
குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரையான சேவையினை எதிர்வரும் 30ஆம் திகதி வரை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளது.
இதுவரை காலமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் மாத்திரம் சேவையினை வழங்கி வந்த கடுகதி ரயில் தற்போதைய பாடசாலை விடுமுறை மற்றும் சுற்றுலா பயணிகளின் கோரிக்கைக்கு அமைவாக இம்மாதம் 30ஆம் தேதி வரை தனது சேவையினை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளது.
ஒவ்வொரு நாளும் காலை 5.30 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் குளிரூட்டப்பட்ட புகையிரதமானது 11:15 மணிக்கு யாழ்ப்பாண புகையிரத நிலையத்தை வந்தடைந்து பின்னர் காங்கேசன் துறையிலிருந்து மதியம் 12.34 க்கு தனது சேவையை ஆரம்பிக்கும் புகையிரதம் இரவு 7.20 மணிக்கு மீண்டும் கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடைகிறது.
யாழ்ப்பாணத்திலிருந்து பயணிக்கும் புகையிரதம் கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்தில் தனது பயணத்தினை நிறைவு செய்கிறது.
இருப்பினும் கல்கிசை வரை பயணம் செய்யும் பயணிகள் புறக்கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து மற்றுமொரு வாகனத்தின் ஊடாக பயணத்தினை மேற்கொள்ள வேண்டிய சூழல் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
எனவே இன்றைய தினம் அதிகளவாக பயணம் செய்யும் பயணிகள் கொழும்பின் புறநகர் பகுதிகளான வெள்ளவத்தை பம்பலப்பிட்டி, கல்கிசை ஆகிய பகுதிகளுக்கும் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.
தொடர்ச்சியான சேவையினை கல்கிசை வரை வழங்குவதன் ஊடாகவே தம்மால் இலகுவாக பயணம் செய்ய முடியும் எனவும் அதனை நிவர்த்தி செய்வதற்கு புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.