புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படும் புதிய வகை ’ஜீப்ரா’ மீன்கள்
புதிய வகை ஜீப்ரா மீன்கள் மருத்துவ ஆய்வாளர்களை பெரும் சிக்கலில் இருந்து மீட்டுள்ளன. இவ்வகை மீன்கள் உடலில் ஆன்டி பாடிஸ் (antibodies) எனப்படும் எதிர் உயிரிகள் வளர்தல் மற்றும் பரவுதல், உடல் செல்களில் ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் உள்ளிட்டவற்றை ஆராய உதவியாக உள்ளன.
பல்வேறு நோய்களுக்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்படும் போது முதலில் அவற்றை மருத்துவ நிபுணர்கள் விலங்குகளின் உடலில் பரிசோதித்து பார்ப்பது வழக்கம். ஆனால் இவற்றில் பல கடினமான நடைமுறைகள் உள்ளன என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இந்நிலையில் ஜீப்ரா மீன்களின் கண், மூளை, சிறுநீரகம், ரத்தம் போன்றவை மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ள உகந்ததாக உள்ளன என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்தியன் ஜீப்ரா மீன் ஆய்வாளர்கள் கூட்டம் கடந்த 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை 3 நாட்கள் ஹைதராபாத்தில் நடைபெற்றது.
செல்லுலர் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்துடன் (சிசிஎம்பி) இணைந்து நடத்தப்பட்ட இக்கூட்டத்தில் இத்துறையில் நிகழ்ந்து வரும் மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
குறிப்பிட்ட நோய் மனித உடலை தாக்கும்போது அது எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை ஜீப்ரா மீனில் செய்யப்படும் சோதனைகளை வைத்து எளிதில் தெரிந்துகொள்ள முடியும் என கூறினர் சிசிஎம்பி-ஐ சேர்ந்த மருத்துவ அறிவியலாளர்கள்.