மாணவி றெஜீனா படுகொலையை கண்டித்து கரைச்சி பிரதேச சபையில் தீர்மானம்..

யாழ்ப்பாணம் சுழிபுரம், காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த சிறுமி சிவனேஸ்வரன் றெஜீனா படுகொலை செய்யப்பட்டமையைக்
கண்டித்து நேற்றைய தினம் கரைச்சி பிரதேச சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கரைச்சிப் பிரதேச சபையின் சபை அமர்வு நேற்றைய தினம் சபை மண்ணபத்தில் இடம்பெற்றது.
குறித்த பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் மு.சிவமோகன் முன்மொழிந்த நிலையில் சபையால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
குறித்த சிறுமி படுகொலை செய்யப்பட்டமை க்கு கண்டனம் தெரிவித்தும், கொலையாளிகள் சிறுமியின்
உறவுகளாக இருந்தும் கொடிய போதைவஸ்துக்கு அடிமைப்பட்ட நிலையில் பந்த பாசங்களைக் கூட துச்சமாக கருதும் மனோ நிலைக்கு உள்ளாக்கிய
போதைவஸ்துக்கு எதிராகவும், மிகவும் கடினமான சட்டங்களை உருவாக்கி கொலையாளிகளுக்கு கால தாமதமின்றி உச்ச பட்ச தண்டனையினை வழங்கவும்,
கொடிய போதைவஸ்துக்களை நாட்டில் இல்லாது தடுப்பதற்கும் சட்டங்களை விரைந்து நடைமுறைப்படுத்த அரச தலைவரைக் கோருவது எனவும்,
கொடிய கொலைக்கு எதிராகவும் போதைப்பொருளுக்கு எதிராகவும் குறித்த கண்டனத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது.
இதேநேரம் குறித்த தீர்மானம் உள்ளிட்ட 07 பிரேரணைகளும் சமர்ப்பிக்கப்பட்டு வழிமொழியப்பட்டு விவாதங்களுக்குப்பின் சபையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதில் கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடங்களை
இனங்கண்டு வர்த்தமானி பத்திரிகையில் விளம்பரம் செய்வதான பிரேரணை தவிசாளரால் முன்மொழியப்பட்டதோடு
கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கலைஞர்களின் பங்களிப்புடன் தரமான வீதி நாடகம் ஒன்றினை
தயார்ப்படுத்தி மக்களை விழிப்பூட்டும் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நா.செல்வநாயகம் முன்மொழிந்தார்.
இதேபோன்று பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளை பாதுகாப்பான புகையிரதக் கடவைகளாக மாற்றுவதற்கான
நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உறுப்பினர் வி. கிருஸ்ணவேணி முன்மொழிந்தார். இதேநேரம் பாடசாலை
மாணவர்களிடையே ஒழுக்க விழுமியங்களை சீர்ப்படுத்தத்தக்க வகையில் மாணவர்களின் சிகை அலங்காரத்தினை உரிய கட்டொழுங்கில் நடைமுறைப்படுத்துவதற்கு
ஏதுவாக முடி திருத்தும் நிலையங்களை அறிவுறுத்தி முகாமைப்படுத்த வேண்டும் என உறுப்பினர் அ.சத்தியானந்தம் முன்மொழிந்தார்.
சுண்டிக்குளம் பகுதியில் பிதிர்க்கடமைகளை நிறைவேற்றுவதற்கான இடத்தினை அமைக்க வேண்டும் என உறுப்பினர் கு.புவீதன் முன்மொழிந்த்தோடு
கிளிநொச்சி குளத்தின் அணைக்கட்டுக்கு கீழ் உள்ள வீதியோரப் புனரமைப்பும், இயற்கையான நீர் நிலையை சுத்தமாக்கி
சிறந்த பொழுதுபோக்கு மையமாக மாற்ற வேண்டும் என உறுப்பினர் சி.புவனேஸ்வரன் முன்மொழிந்த நிலையில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.