மாணவியைத் தாக்கிய இளைஞர் குழு - பாடசாலையைப் புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்!

மதுபோதையில் இருந்த இளைஞர் குழுவினால், மாணவி ஒருவர் தாக்குதலுக்கு இலக்கான சம்பவத்தைக் கண்டித்து, கிளிநொச்சி- கனகாம்பிகைக்குளம் பாடசாலை மாணவர்கள் இன்று கற்றல் நடவடிக்கைகள் புறக்கணித்தனர்.
தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி, மாணவர்கள், கற்றல் செயற்பாடுகளில் இருந்து விலகி, பாடசாலை மைதானத்தில் ஒன்றுகூடியிருந்தனர். அம்மாணவர்களுடன், அவர்களது பெற்றோரும், பாடசாலை மைதானத்தில் கூடியிருந்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வருகைதந்த கரைச்சி கோட்ட அதிகாரி மற்றும் பொலிஸார், பாடசாலை அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து இவ்வாறானச் செயற்பாடுகள் இடம்பெறாதவாறு நடவடிக்கை எடுப்பதாக, பொலிஸாரால் உறுதிமொழி வழங்கப்பட்டதை அடுத்து, மாணவர்கள் தமது வகுப்பறைகளுக்குச் சென்றனர்.
கிளிநொச்சி - கனகாம்பிக்கைக் குளம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர், நேற்று மாலை பிரத்தியேக வகுப்பை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, பாடசாலைக்கு அருகில், மதுபோதையில் நின்ற இளைஞர்கள் சிலர், மாணவி மீது தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டதுடன், அவரைத் தாக்கியுமுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில், மாணவி தனது பெற்றோருக்குத் தெரியப்படுத்தியதை அடுத்து, மாணவியின் தந்தை, சம்பவ இடத்துக்குச் சென்று குறித்த இளைஞர்களை எச்சரித்துவிட்டுச் சென்றுள்ளார். இதையடுத்து அவ்விளைஞர் குழு, மாணவியின் வீட்டுக்குள் புகுந்து, பொருட்களைச் அடித்துச் சேதப்படுத்தியதுடன், வீட்டில் இருந்தவர்களையும் தாக்கியுள்ளனர்.
இது தொடர்பில், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய இருவரைக் கைதுசெய்த பொலிஸார், அவர்கள் இருவரையும் உடனேயே விடுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.