SuperTopAds

ரூ.17,843 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பாலத்தில் விரிசல்: கான்ட்ராக்டருக்கு ரூ.1 கோடி அபராதம்!

ஆசிரியர் - Admin
ரூ.17,843 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பாலத்தில் விரிசல்: கான்ட்ராக்டருக்கு ரூ.1 கோடி அபராதம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த அடல் சேது பாலத்தில் விரிசல் ஏற்பட்டதாக தகவல் பரவிய நிலையில் ஒப்பந்ததாரருக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது. இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, மும்பை மற்றும் நவிமும்பை நகரங்களை இணைக்கும் வகையில் அரபிக்கடலில் 22 கி.மீ தூரத்தில் அடல் சேது பாலம் என்ற கடல் பாலம் அமைக்கப்பட்டது.    

இந்த பாலமானது இந்தியாவின் மிக நீளமான கடல்வழி பாலம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. மேலும், இது மும்பை சிவ்ரி பகுதியில் தொடங்கி நவிமும்பை புறநகரான சிர்லேவில் முடிவடைகிறது.

கடந்த 2018 -ம் ஆண்டு தொடங்கிய பாலத்தின் பணிகள் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தான் முடிந்தது. ரூ.17,843 கோடி செலவில் 6 வழிச்சாலையாக அமைக்கப்பட்ட அடல் சேது பாலத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

இந்நிலையில் அடல் சேது பாலம் திறக்கப்பட்ட ஐந்தே மாதங்களில் பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக சில புகைப்படங்களை மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோல் வெளியிட்டிருந்தார்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், சேது பாலத்தின் முக்கிய பகுதியில் விரிசல் ஏதும் இல்லை என்று மும்பை பெருநகர மேம்பாட்டு ஆணையம் பதில் அளித்தது.

இந்நிலையில் , கடந்த ஜூன் மாதம் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு பின்னர் சரிசெய்யபட்டது என்றும், பாலத்தை கட்டிய ஸ்டார்பக் ஒப்பந்ததாரருக்கு 1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலானது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியின் வழியாக பெறப்பட்டுள்ளது.