SuperTopAds

"கோடி ரூபாய் கொடுத்தாலும் ராகுல் காந்தி தைத்த செருப்பை கொடுக்க மாட்டேன்" - காலணி தைக்கும் தொழிலாளி!

ஆசிரியர் - Admin

ராகுல் காந்தி தைத்த செருப்பை அதிக விலைக்கு கேட்டும் அதனை காலணி தைக்கும் தொழிலாளி விற்க மறுத்துள்ளார். இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், சுல்தான்பூரில் வசிக்கும் காலணி தைக்கும் தொழிலாளி ராம் சைத். இவர், ஏழ்மையின் காரணமாக தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு தகவல் தெரிவித்திருந்தார்.     

இதன் பின்னர், அமித் ஷா குறித்து அவதூறாக பேசியதாக தொடர்ந்த வழக்கில், கடந்த 26-ம் திகதி சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜரானார்.

அப்போது, நீதிமன்றம் செல்லும் வழியில் ராம் சைத் வீட்டின் அருகே காரை நிறுத்தி அவரை சந்தித்தார். அவரது குடும்பத்தினருடன் 30 நிமிடங்கள் ராகுல் காந்தி உரையாடினார்.

பின்னர், அவருடன் சேர்த்து காலணி ஒன்றையும் தைத்தார். இதையடுத்து அவரது ஏழ்மை நிலைமையை குறித்து கேட்டறிந்தார். பின்னர், உதவி செய்வதாக கூறிவிட்டு கிளம்பி சென்றார். அடுத்த ஒரு சில தினங்களிலே அவருக்கு காலணி தைக்கும் இயந்திரத்தையும் அனுப்பி வைத்தார்.

இந்நிலையில், ராகுல் காந்தி தைத்த செருப்பை பலரும் அதிக விலைக்கு கேட்பதாக தொழிலாளி ராம் சைத் தெரிவித்துள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசுகையில், "என் வீட்டுக்கு ஒரு நபர் காரில் வந்து, ராகுல் தைத்த அந்த செருப்புக்கு ரூ.1 லட்சம் தருவதாக கூறினார். ஆனால், நான் அதை கொடுக்க மறுத்துவிட்டேன்.

பின்னர், நான் கடைக்கு சென்றதும் மற்றொரு நபர் வந்து, ரூ.2 லட்சம் தருவதாக கூறினார். அதற்கும் நான் மறுத்துவிட்டேன்.

மேலும், அவர் தைத்த செருப்பை அதிக விலைக்கு கேட்டு தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. கோடி ரூபாய் கொடுத்தால் கூட அந்த காலணிகளை நான் விற்கமாட்டேன். அதனை பிரேம் போட்டு வீட்டில் மாட்டி வைக்க போகிறேன்" என்றார்.