பொலிஸ் உத்தியோகஸ்த்தரை கடத்திச் சென்று நிர்வாணப்படுத்தி தாக்குதல்! மற்றொரு பொலிஸ் உத்தியோகஸ்த்தர் உட்பட மூவர் கைது..

ஆசிரியர் - Editor I
பொலிஸ் உத்தியோகஸ்த்தரை கடத்திச் சென்று நிர்வாணப்படுத்தி தாக்குதல்! மற்றொரு பொலிஸ் உத்தியோகஸ்த்தர் உட்பட மூவர் கைது..

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை நிர்வாணமாக்கித் தாக்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 59 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரொருவரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.

இவர் கடந்த 24 ஆம் திகதி அன்று தனது கடமைகளை முடித்துவிட்டு வீட்டுக்குத் தேவையான மரக்கறிகளை வாக்குவதற்காக நுவரெலியா, பொரலந்த பிரதேசத்திற்குச் சென்றுள்ளார்.

இதன்போது, அங்குச் சென்ற இனந்தெரியாத நபர்கள் சிலர் இவரைத் தாக்கி கை,கால்களைக் கட்டி லொறி ஒன்றின் மூலம் வீடொன்றுக்கு அழைத்துச் சென்று இவரை நிர்வாணமாக்கி பலமாகத் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, பிரதேசவாசிகளினால் கிடைக்கப் பெற்ற தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தாக்குதலுக்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தரை காப்பாற்றி  நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில், சந்தேகநபர்கள் தாக்குதலுக்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தரிடமிருந்த 26,600 ரூபா பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட பொருட்களை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த தாக்குதலுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களும் பொலிஸ் உத்தியோகத்தரொருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா பொலிஸ் பிரிவிலிருந்து நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குப் பணி மாற்றம் செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் தனது மனைவியைத் தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் இவரது மனைவி இவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ள நிலையில் 

இது தொடர்பான விசாரணைகள் தாக்குதலுக்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தரினால் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதுடன் இது தொடர்பில் இருவருக்கும் இடையில் முரண்பாடாக ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு