இடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக் கொள்ள முடியாததா? சி. தவராசா, எதிர்கட்சித் தலைவர்,
வட மாகாண சபையின் முதலமைச்சரிற்கு எதிராக முன்னைய அமைச்சர் டெனீஸ்வரனினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினைத் தொடர்ந்து மேன்முறையீட்டு
நீதிமன்றத்தினால் அண்மையில் வழங்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவானது சர்ச்சைகளை உருவாக்கியிருக்கும் அதே வேளையில் விமர்சனத்திற்கும் உள்ளாக்கப்பட்டு வருகின்றது.
ஊடகங்கள், இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் இவ் வழக்குத் தொடர்பாகவும் இடைக்காலத்தடை உத்தரவு தொடர்பாகவும் வெளியாகிய கருத்துக்களை வைத்துப் பார்க்கும் போது
இவ் விமர்சனங்களை எழுதிய பலரிற்கு இவ்வழக்கு எந்த அடிப்படையில் தொடரப்பட்டது, எக் காரணிகளின் அடிப்படையில் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, இடைக்காலத் தடை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் யாவை மற்றும் அரசியல் யாப்பில்,
குறிப்பாக பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தில், இவ்விடயங்கள் தொடர்பான ஏற்பாடுகள் போன்ற விடயங்களில் சரியான தெளிவில்லாமல் இருப்பதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
விமர்சனங்கள் யாவும் அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கப்பட்டுள்ளதே தவிர சட்ட ரீதியான அணுகுமுறையாகத் தெரியவில்லை.
இவ் வழக்கின் அடிப்படை விடயங்களைப் புரிந்து கொள்ளாத அல்லது புரிந்து கொள்ள விரும்பாதவர்கள் பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தில் ஆளுநரிடமே அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது என்றும்
முதலமைச்சரிடமிருந்த அதிகாரங்களை இவ் வழக்கின் மூலம் ஆளுநரிற்கு வழங்க வழிவகுத்துள்ளதாகவும் விமர்சனங்களை முன் வைத்துள்ளனர்.
மாகாண அமைச்சர்களை நியமிப்பது தொடர்பாக இலங்கை அரசியலமைப்பின் பிரிவு 154கு(5) இல் எவ்வாறு கூறப்பட்டுள்ளதோ (ஆளுநர் பிரதான அமைச்சரின் ஆலோசனை மீது
அம் மாகாணத்திற்கென அமைக்கப்பட்ட மாகாண சபையின் உறுப்பினர்களிலிருந்து ஏனைய அமைச்சர்களை நியமித்தல் வேண்டும்.),
அதே போன்ற ஓர் ஏற்பாடுதான் மாநில சட்டசபை அமைச்சர்களை நியமிப்பது தொடர்பாக இந்திய அரசியலமைப்பின் பிரிவு 164(1) இலும் குறிப்பிடப்பட்டுள்ளது (ஏனைய அமைச்சர்கள் முதலமைச்சரின் ஆலோசனையில் ஆளுநரால் நியமிக்கப்படுவர்.).
பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தில் எவ்வாறு அமைச்சர்களின் நியமனம் தொடர்பாக மட்டும் குறிப்பிடப்பட்டு அவர்களை நீக்குவது தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லையோ,
அதே போன்றுதான் இந்திய அரசமைப்பிலும் மாநில சட்டசபை அமைச்சர்களை நீக்குவது தொடர்பாக எதுவும் குறிப்பிடப்பட்டில்லை.
இந்தியாவின் 29 மாநில சட்டசபைகளிலும் அமைச்சர்களை நியமிப்பது மற்றும் நீக்குவது தொடர்பான விடயங்கள் சுமூகமாகத்தான் நடைபெற்று வருகின்றது.
இவ்விடயம் தொடர்பாக அரசியலமைப்பையோ அல்லது ஆளுனரின் அதிகாரத்தினையோ எவரும் குறை கூறியதாக இல்லை.
ஆதலினால் இவ்விடயம் தொடர்பில் பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தில் குறை இல்லை என்பதை விமர்சகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் இக் குறிப்பிட்ட சரத்தின் அமுலாக்கத்தில் விட்ட தவறே இங்கு விமர்சனத்திற்குள்ளாக்கப்பட வேண்டிய விடயம். அதன் அமுலாக்கத்தினை முறையாகச் செய்திருந்தால் இவ்வளவு பிரச்சினைகளும் தோன்றியிருக்காது.
இவ் வழக்குத் தொடர்பாக நீதிமன்றக் கட்டளை பிறப்பிக்கப்பட்டதன் (29.06.2018) பின் முதலமைச்சரால் 01.07.2018 இல் ஊடகங்களிற்கு அனுப்பப்பட்ட குறிப்பில் 'மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இவ் வழக்கைக் கேட்க உரித்து இல்லை என்றால்
இடைக்காலத் தடைக்கட்டளையும் பிறப்பிக்க உரித்து இல்லை என்று ஆகின்றது ........... மேன் முறையீட்டு நீதிமன்றம் இவ் ஆட்சேபனைக்குப் பதில் தராது இடைக்கால நிவாரணங்களை வழங்கியிருந்தால் அது தவறாகவே அமையும்.'
எனவும் 'நீதிமன்றத்தின் அடிப்படை அந்தஸ்தே கேள்விக்கிடமாக்கப்பட்டிருக்கும் போது அந்த ஆட்சேபணைக்கு விடையளிக்காமல் தமக்கு அந்தஸ்து இருப்பது போல் இடைக்காலத் தடைக்கட்டளையைப் பிறப்பிப்பது சட்டப்படி ஏற்றுக் கொள்ள முடியாது.'
எனவும் குறிப்பிட்டுவிட்டு இறுதியில் தீர்மானத்தின் பிரதி வராமல் எதுவும் கூறமுடியாதிருக்கின்றது எனவும் நாசூக்காகக் கூறப்பட்டுள்ளது.
நீதிமன்றக் கட்டளை பிறப்பிக்கப்பட்டு மறுதினமே (30.06.2018) நீதிமன்றக்கட்டளையின் பிரதி என்னிடம் உள்ளது ஆனால் முதலாவது பிரதிவாதியான முதலமைச்சர் தனது 01.07.2018ம்
திகதிய ஊடகக் குறிப்பில் 'தீர்மானத்தின் பிரதி வராமல் எதுவும் கூறமுடியாதிருக்கின்றது' என்று கூறியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
நீதியரசர் முதலமைச்சர் குறிப்பிட்டது போல் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இவ் வழக்கை விசாரிப்பதற்கும் இடைக்காலத் தடைக்கட்டளை பிறப்பிப்பதற்கும் உரித்து உண்டா இல்லையா
என்பது தொடர்பாகவும் அவ்வாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டதன் மூலம் நீதிமன்றத்தின் அடிப்படை அந்தஸ்தே கேள்விக்கிடமாக்கப்பட்டிருக்கின்றதா என்பது தொடர்பாகவும் மேல்முறையீட்டு நீதியரசர்களான
ஜானக டி சில்வா மற்றும் திருமதி கே. விக்கிரமசிங்க ஆகியோர் என்ன கூறியிருக்கிறார்கள் என்பதனை இவ் வழக்கின் பின்னணியுடன் சேர்த்துப் பார்ப்பதே பொருத்தமாக இருக்கும்.
வழக்கின் பின்னணி
வடமாகாண அமைச்சர்களிற்கெதிராகக் கிடைக்கப்பெற்ற குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக 2016ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் முதலமைச்சரினால் ஓர் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.
அவ் விசாரணைக் குழுவின் அறிக்கை 2017 ஆம் ஆண்டு மே மாதத்தில் முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அவ்வறிக்கையில் அமைச்சர்களான பொ. ஐங்கரநேசன், த. குருகுலராஜா ஆகியோர் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட வேணடும் எனவும்
ஏனைய இரு அமைச்சர்களான பா. டெனீஸ்வரன், வைத்திய கலாநிதி ப. சத்தியலிங்கம் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ் அறிக்கையினை மாகாண சபையில் ஆனி மாதம் 14ஆம் திகதி அன்று சமர்ப்பித்த முதலமைச்சர், அவ் அறிக்கை தொடர்பான தொடர் நடவடிக்கையாக குற்றம் சாட்டப்பட்ட இரு அமைச்சர்களும் பதவி விலக வேண்டுமென்றும்
ஏனைய இரு அமைச்சர்களிற்கும் எதிராக மீண்டும் விசாரணை நடாத்தப்படும் என்றும் அது வரை அவர்களைக் கட்டாய விடுப்பில் செல்லுமாறும் கோரியிருந்தார்.
முதலமைச்சரின் வேண்டுகோளிற்கு அமைய பொ. ஐங்கரநேசன், த. குருகுலராஜா ஆகியோர் தங்களது இராஜிநாமாக் கடிதத்தைக் கொடுத்திருந்தனர். அமைச்சர் சத்தியலிங்கம் தான் பதவி விலக தயாராக இருப்பதாக கடிதத்தை அனுப்பியிருந்தார்.
அமைச்சர் டெனிஸ்வரன் இராஜிநாமாக் கடிதத்தைக் கொடுக்காது தொடர்ந்து அமைச்சராகப் பணியாற்றினார். 22.08.2017ஆம் திகதி நடைபெற்ற அமைச்சர் சபைக் கூட்டத்திற் கூட அமைச்சர் டெனிஸ்வரன் பங்கெடுத்திருந்தார்.
இச் சூழ்நிலையில் டெனிஸ்வரன் அவர்களிற்கு முதலமைச்சர் அவர்களினால் 20.08.2017 அன்று திகதியிடப்பட்டு 24.08.2017 அன்று கிடைக்கப்பெற்ற கடிதத்தில் 'உங்களை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு முடிவெடுத்துள்ளேன்.
ஆதலினால் தங்களது சகல அலுவலக ஆவணங்களையும் உடனடியாக தங்கள் செயலாளரிடம் கையளிக்கும்படி கேட்டுக் கொள்கின்றேன்' என்றவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை தனது அமைச்சிற்குப் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளார்கள்
என்பதனை அறிந்த டெனிஸ்வரன் அதனை ஆட்சேபித்து 23.08.2017இல் முதலமைச்சரிற்குப் பிரதியிடப்பட்டு ஆளுநரிற்குக் கடிதம் அனுப்பியிருந்தார்.
அதனையும் பொருட்படுத்தாது அவரது அமைச்சுப் பொறுப்புக்கள் க. சிவநேசன், அனந்தி சசிதரன் மற்றும் முதலமைச்சரிற்கிடையில் பகிரப்பட்டு சத்தியப் பிரமாணமும் எடுக்கப்பட்டது.
அதன்பின் டெனிஸ்வரனின் 23.08.2017ஆம் திகதிய கடிதத்திற்குப் பதிலளித்த முதலமைச்சர் அரசியலமைப்பின் பிரிவு 154கு(5) மற்றும்; ஐவெநசிசநவயவழைn ழுசனiயெnஉந பிரிவு 14கு ஆகியவற்றினை கவனத்தில் கொள்ளவும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இப் பின்னணியில் டெனிஸ்வரனால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த வருடம் செப்ரெம்பர் மாதத்தில் ஓர் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவ் வழக்கின் சாராம்சமானது
அரசியலமைப்பின் பிரிவு 154(கு)5 இற்கு அமைய ஓர் அமைச்சரை நியமிக்கும் போது ஆளுநர் முதலமைச்சரின் ஆலோசனைப்படியே செயற்படவேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் அமைச்சர்களை நீக்குவது தொடர்பாக அங்கு எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
ஆதலினால் முதலமைச்சரினால் தான் பதவி நீக்கப்பட்டமையும் மற்றும் தான் அமைச்சராக இருக்கும் போது வேறு இருவரை அப்பதவிக்கு நியமித்தமையும் தவறானதாகும்.
இவ் வழக்கு ஒக்ரோபர் மாதத்தில் மேல் நீதிமன்றத்தில் எடுக்கப்பட்டபோது முதலமைச்சரினால் டெனிஸ்வரனிற்கு அனுப்பப்பட்ட கடிதம் (அவரைப் பதவி நீக்கியதாக) ஓர் அரசியல் ரீதியான விடயப்பாடேயன்றி நிர்வாக சட்ட விதிகளிற்குட்பட்டவை அல்ல
எனக் கூறி வழக்கை விசாரிப்பதற்கு நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனை ஆட்சேபித்து டெனிஸ்வரன் உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஓர் வழக்கைப் பதிவு செய்திருந்தார்.
அவ் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது அவ் வழக்கினை மேல் நீதி மன்றத்தில் விசாரிப்பதற்கு எதிர்த்தரப்புச் சட்டத்தரணிகள் இணங்கியதன் அடிப்படையில் அவ் வழக்கினை வேறு இரு மேன்முறையீட்டு நீதிபதிகள் முன் விசாரிக்கும் வண்ணம் உயர் நீதிமன்றம் கட்டளையிட்டது.
இக் கட்டளையின் அடிப்படையிலேயே மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன் இவ் வழக்கு மீள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.
டெனீஸ்வரனினது மனுவில் பிரதிவாதிகளாக முதலமைச்சர் மற்றும் தற்போதைய அமைச்சர்களான க.சர்வேஸ்வரன், அனந்தி சசிதரன், ஞா.குணசீலன்,
க.சிவநேசன், முன்னைய அமைச்சர் ப. சத்தியலிங்கம் மற்றும் ஆளுநர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அம்மனுவில்; கோரப்பட்ட முக்கிய விடயங்களாவன:
1) தான் தொடர்ந்து அமைச்சராக இருப்பதற்கு எதிராளிகளால் ஏற்படுத்தப்பட்டுள்ள தடைகளை நீக்குவதற்கான இடைக்கால உத்தரவு.
2) முதலமைச்சரினால் டெனிஸ்வரனிற்கு அனுப்பப்பட்ட 20.08.2017 ஆம் திகதிய கடிதத்தை (அவரைப் பதவி நீக்கம் செய்வதாக) நடைமுறைப்படுத்துவதனைத் தடை செய்யும் வண்ணம் இடைக்கால உத்தரவு.
3) தனக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சுப் பதவிகளினை முதலமைச்சர் உட்பட மூன்று அமைச்சர்களிற்குப் பிரித்து வழங்கிய வர்த்தமானி அறிவித்தலை இடை நிறுத்தும் வண்ணம் இடைக்கால உத்தரவு.
முதலமைச்சரின் சட்டத்தரணிகளால் இவ் வழக்குத் தொடர்பாக மூன்று ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டன, அவையாவன:
1) பொருள்கோடல் தொடர்பான விடயங்கள் உயர் நீதிமன்றத்தால் மட்டுமே விசாரணைக்குட்படுத்த வேண்டுமென அரசியலமைப்பின் பிரிவு 125 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் பிரிவு 154கு(5) தொடர்பான பொருள்கோடல் இவ்வழக்கில் தேவைப்படுவதனால், இவ் வழக்கை விசாரிப்பதற்கு இந் நீதிமன்றத்திற்கு நியாhயாதிக்கம் இல்லை.
2) வழக்கு முறைப்பாட்டின் இணைப்புகள் மூல ஆவணங்களாக அல்லது உறுதி செய்யப்பட்ட பிரதிகளாக அமைந்திருத்தல் வேண்டும்; அவை அவ்வாறு அமைந்திருக்கவில்லை.
3) எந்த நபரினது அதிகார செயற்பாட்டினை தடுக்க வேண்டுமோ அல்லது நிறுத்த வேண்டுமோ அல்லது அவ்வாறான அதிகார செயற்பாட்டின் மூலம் நன்மை பெறுபவர் யாரோ அவர்கள் மட்டுமே
பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும். அந்த அடிப்படையில் ப. சத்தியலிங்கத்தின் பெயர் பிரதிப் பட்டியலில் இருந்து நீக்கப்படல் வேண்டும்.
பிரதிவாதியான முதலமைச்சரின் சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகள் தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தனது பரிந்துரைகளைப் பின்வருமாறு கூறியுள்ளது:
(1) அரசியலமைப்பின் பிரிவு 154கு(5) இற்குரிய பொருள்கோடல் தொடர்பான விடயம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நியாயாதிக்க விடயத்திற்குரியது அல்ல என்ற ஆட்சேபனை தொடர்பாக நீதிமன்றம் பரிந்துரைக்கையில்:
அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள ஒரு விடயம் தொடர்பாக வௌ;வேறு முரணான கருத்துக்கள் முன்மொளியப்படும் போதுதான் அவ்விடயம் தொடர்பான பொருள்கோடல் தேவைப்படுகின்றது.
இங்கு அப்படியானதொரு நிலை ஏற்படவில்லை. இங்கு பிரஸ்தாபிக்கப்பட்டுள்ள விடயம் அரசியலமைப்பின் பிரிவு 154கு(5) இன் அமுலாக்கம் தொடர்பானதேயொழிய பொருள்கோடல் தொடர்பானதல்ல.
ஆதலினால் இவ்விடயத்தைத் தீர்மானிப்பதற்கு நீதிமன்றத்திற்கு நியாயாதிக்கம் உண்டு. இது தொடர்பாக முன்னைய நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் சட்ட ஆவணங்கள் ஆகியவற்றினை நீதிமன்றம் சான்றாகப் பகிர்ந்துள்ளது.
(2) மூல ஆவணங்கள் அல்லது உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகள் சமர்ப்பிக்கப்படவில்லை என்ற ஆட்சேபனை தொடர்பாக நீதிமன்றம் பரிந்துரைக்கையில்:
டெனிஸ்வரன் அவர்களிற்கு முதலமைச்சரினால் அனுப்பப்பட்ட இரண்டு கடிதங்களும் மூல ஆவணங்களாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனையவை டெனீஸ்வரனினால் ஏனையோரிற்கு எழுதப்பட்ட கடிதங்களின் பிரதிகள் ஆகையினால்
மூல ஆவணங்கள் தம்மால் சமர்ப்பிக்க முடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளதாகவும் அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட வர்த்தமானிப் பிரசுரங்கள் அரசாங்க இணையத்தளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டவை என குறிப்பிடப்பட்டுள்ளமையால்,
இலத்திரனியல் பரிமாற்றச் சட்டத்திற்கு அமைவாக அவை ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
(3) ப. சத்தியலிங்கத்தின் பெயர் பிரதிவாதியாகச் சேர்க்கப்பட்டது தொடர்பாக நீதிமன்றம் பரிந்துரைக்கையில்:
அவரது பெயர் நீக்கப்பட்டாலும் இந்த மனுவில் கோரப்பட்டுள்ள விடயங்களிற்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்ற காரணத்தால் அக் கோரிக்கை நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்படுகின்றது.
நீதிமன்றக் கட்டளை
பிரதிவாதிகளின் மூன்று ஆட்சேபனைகளும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்ட நிலையில், மனுதாரனான டெனீஸ்வரனால் முன்வைக்கப்பட்ட மூன்று கோரிக்கைகளினையும் நீதிமன்றம் ஏற்று அதற்கான கட்டளையினைப் பிறப்பித்துள்ளது.
இவ்வழக்கினை நீதியரசர் எ சட்டத்தரணி என்று பார்க்காமல் பொருள்கோடல் எ அமுலாக்கல் என்று நோக்கினால் பல விடயங்களில் தெளிவு கிடைக்கும்.