தாலிக்கொடிச் சிகிச்சை எனக் கூறி சுழிபுரத்தில் நூதனமாகத் திருட்டு..
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மகனின் நோய் குணமாக வேண்டுமாயின் தாலிக்கொடியில் சிகிச்சை செய்யவேண்டும் எனக் கூறிய போலிச் சாமியார் ஒருவர் தாலிக்கொடியையும் அபகரித்துக்கொண்டு தப்பிச்சென்றார்.
இச்சம்பவம் சுழிபுரம் - பெரியபுலோவில் கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
சுழிபுரம் - பெரியபுலோவைச் சேர்ந்த இராசேந்திரம் டினு (வயது-14) என்ற சிறுவன் நோய்வாய்ப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இக்குடும்பத் தலைவருக்கு வன்னியில் அறிமுகமான நபர் ஒருவர் எதேட்சையாக கடந்த புதன்கிழமை இவர்களின் வீட்டுக்கு வருகைதந்தார். அவரோடு உரையாடிக்கொண்டிருந்தபோது மகனின் நோய்நிலையை அவருக்குக் கூறிக் கவலைப்பட்டுள்ளனர்.
மகனின் பிறந்த திகதி மற்றும் நேரம் போன்றவற்றைக் கேட்ட அந்த ஆசாமி சிறிது நேர சிந்தனையின் பின்னர், மகனுக்கு கடும் தீவிரமான நோய் ஏற்பட்டுள்ளது. வீட்டில் கும்பம் வைத்து, கும்பத்தில் தாலிக்கொடி ஒன்றை வைத்து பூசை செய்த பின்னர் அத்தாலிக்கொடியை மகனின் உடம்பில் வைத்து வணங்கினால் மட்டுமே குணமாகும் எனக் கூறினார்.
அதை நம்பிய குடும்பத்தினர் தம்மிடம் தாலிக்கொடி இல்லாத நிலையிலும் உறவினர் ஒருவரிடம் ஓடிச் சென்று ஐந்தரைப் பவுண் தாலிக்கொடியைப் பெற்றுவந்து அவரிடம் கொடுத்தனர்.
வீட்டு மின்சுற்றுக்கு பயன்படுத்தப்படும் வயர் துண்டு ஒன்றும் வேண்டும் என அவர் கேட்டுள்ளார். அதையும் கொடுத்தனர். வெள்ளைத் துணி ஒன்றில் தாலிக்கொடி வைத்துக் கட்டப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
வீட்டில் கும்பம் வைக்கப்பட்டது. சில மந்திரங்களும் ஓதப்பட்டன. சிறுவனின் தாயார் கும்பத்திற்கு முன்பாக இருத்தப்பட்டு வெள்ளைத் துணியாலான பொட்டலம் அவரது மடியில் வைக்கப்பட்டது.
பூசைகள் முடிந்த பின்னர் குறித்த நகைப் பொட்டலத்தை கொழும்புக்குக் கொண்டுசென்று சிறுவனின் உடம்பில் வைத்து வணங்கிய பின்னர் மூன்றாம் நாள் வீட்டிற்கு கொண்டுவந்து சுவாமி அறையில் வைத்து அவிழ்த்து தாலியை எடுக்குமாறு அந்த ஆசாமி கூறிவிட்டு பூசைக்கான கொடுப்பனவையும் பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார்.
இக்குடும்பத்தினரும் அவசர அவசரமாக அன்றைய தினமே கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்று மகனின் உடலில் வெள்ளைப் பொட்டலத்தை வைத்து வணங்கிவிட்டு நேற்று வெள்ளிக்கிழமை வீட்டிற்கு வந்து அதை அவிழ்த்தனர்.
அதற்குள் வயர் மட்டுமே இருந்துள்ளது. தாலிக்கொடியைக் காணவில்லை. இதன்பின்னரே தாங்கள் ஏமாற்றப்பட்டதை அவர்கள் உணர்ந்தனர்.
இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவுள்ளனர் என அவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த சிறுவனுக்கு தலையில் இரண்டு அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு அவர் குணமாக உள்ளார் எனவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.