ரூ 227 கோடி பணத்தை பொதுமக்களுக்கு தானமாக அளிக்க முன்வந்துள்ள ஐரோப்பிய பெண் கோடீஸ்வரர்!

ஆஸ்திரியா மற்றும் ஜேர்மானிய கோடீஸ்வர வாரிசு ஒருவர் தமது சொத்துக்களில் பெரும்பகுதியை தானமாக அளிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். குறித்த நடவடிக்கைக்கு பொதுமக்களில் ஒரு குழுவை தெரிவு செய்து, அவர்கள் முடிவு செய்வதை தாம் ஒப்புக்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.
வியன்னா நகரில் குடியிருக்கும் 31 வயதான Marlene Engelhorn என்பவரே தமது சொத்தில் 25 மில்லியன் யூரோ தொகையை ( இந்திய மதிப்பில் ரூ 227 கோடி) பொதுமக்களுக்கு தானமாக அளிக்க முடிவு செய்தவர்.
இதன் பொருட்டு 50 பேர் கொண்ட ஆஸ்திரிய பொதுமக்கள் குழு ஒன்றை அமைத்து, அவர்கள் உரிய முடிவெடுப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள Marlene Engelhorn, தமது பாட்டியாரிடம் இருந்து பெருந்தொகையை சொத்தாக பெற்றுள்ளேன், அதனூடாக செல்வாக்கும் தமக்கு அதிகரித்துள்ளது.
எனது சொத்துக்களில் இருந்து வருமான வரியும் தேவை இல்லை என அரசாங்கம் கூறிவிட்டது. அரசாங்கத்தின் இந்த முடிவு தம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 2008ல் இருந்தே ஒருவர் வாரிசாக பெறும் சொத்துக்களுக்கு வரி செலுத்த தேவை இல்லை என ஆஸ்திரியா அரசாங்கம் அறிவித்திருந்தது.
ஐரோப்பா நாடுகளில் ஒருசில நாடுகள் மட்டுமே இவாறான சட்டத்தை கொண்டுவந்துள்ளது. Marlene Engelhorn என்பவர் ஜேர்மன் மருந்து நிறுவன கோடீஸ்வரரான Friedrich Engelhorn என்பவரின் தலைமுறையை சேர்ந்தவராவார்.
2022ல் இவரது பாட்டியார் மறைவுக்கு பின்னர் பெரும் சொத்துக்களுக்கு உரிமையாளரானார். Traudl Engelhorn-Vechiatto தம்பதியின் சொத்துமதிப்பு என்பது 4.2 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே கூறப்படுகிறது.
தமது பாட்டியார் மறைவுக்கு முன்னரே, தமக்கு கிடைக்கவிருக்கும் சொத்தில் பெரும்பகுதியை தானமாக அளிக்க இருப்பதாகவே Marlene Engelhorn அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது 50 பேர்கள் கொண்ட ஆஸ்திரிய பொதுமக்கள் குழுவை தெரிவு செய்யும் நடவடிக்கையை Marlene Engelhorn துவங்கியுள்ளார்.
மொத்தம் 10,000 விண்ணப்பம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 50 பேர்கள் கொண்ட குழுவுக்கு உதவியாக 15 பேர்கள் கொண்ட குழு ஒன்றையும் Marlene Engelhorn தெரிவு செய்ய உள்ளார்.
இந்த 50 பேர்கள் குழு எதிர்வரும் மார்ச் முதல் ஜூன் மாதம் வரையில் கல்வியாளர்கள், பொது சமூக அமைப்புகள் உள்ளிட்டவைகளுடன் கலந்தாலோசிப்பார்கள். இவர்கள் உரிய முடிவெடுப்பார்கள் என்று நம்புவதாகவே Marlene Engelhorn தெரிவித்துள்ளார்.