SuperTopAds

யாழ்ப்பாணம் - நாகப்பட்டினம் கப்பல் சேவை 40 வருடங்களின் பின் இன்று ஆரம்பம்! வரவேற்பு நிகழ்வில் அமைச்சர்கள் பங்கேற்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் - நாகப்பட்டினம் கப்பல் சேவை 40 வருடங்களின் பின் இன்று ஆரம்பம்! வரவேற்பு நிகழ்வில் அமைச்சர்கள் பங்கேற்பு..

தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை நாளை (14) ஆரம்பிக்கப்படுமென துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைய, பயணிகள் கப்பல்  சேவை முன்னெடுக்கப்படுமென அமைச்சின் செயலாளர் K.D.S.ருவன்சந்திர தெரிவித்தார்.

செரியாபாணி (Cheriyapani) எனும் பயணிகள் கப்பல் 100 பயணிகளுடன் நாகப்பட்டினத்தில் இருந்து நாளை 14 ஆம் திகதி காங்கேசன்துறையை வந்தடையவுள்ளது.

மணித்தியாலத்திற்கு 36 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த பயணிகள் கப்பல், 60 கடல்மைல் தூரத்தை 3 மணித்தியாலங்களில் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

14 ஊழியர்கள் ,150 பயணிகளுடன் பயணிக்கும் வசதிகளைக் கொண்ட இந்த குளிரூட்டப்பட்ட கப்பலில், பயணிகளுக்கு தேவையான சிற்றுண்டி, தேநீர், குளிர்பானங்களை கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 11.30 மணிக்கு காங்கேசன்துறை துறைமுகத்தை  செரியாபாணி கப்பல் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு நாகப்பட்டினத்திற்கான பயணத்தை ஆரம்பிக்கவுள்ள  செரியாபாணி கப்பல், மாலை 5 மணிக்கு துறைமுகத்தை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கப்பலை வரவேற்கும் நிகழ்வில் துறைமுகங்கள், கப்பற்றுறை, சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும் கலந்துகொள்ளவுள்ளார்.

கேரளாவின் கொச்சினில் 25 கோடி இந்திய ரூபா செலவில் செரியாபாணி கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்குமிடையிலான கப்பலில் பயணம் மேற்கொள்வதற்கு ஒருவருக்கு ஒருவழிக் கட்டணமாக 27,000 ரூபாவும் இருவழிக்கட்டணமாக 53,500 ரூபாவும் அறவிடப்படவுள்ளதுடன், 50 கிலோகிராம் வரை இலவசமாக பொருட்களை எடுத்துச்செல்லலாம்.

நாகை துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.

இறுதியாக 1984 ஆம் ஆண்டு தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையில் கப்பல் சேவை  இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

40 வருடங்களின் பின்னர் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையே இந்த கப்பல்  சேவை  மீள ஆரம்பிக்கப்படுகிறது.