SuperTopAds

வாலிப கிண்ணத் தொடர்!! -பட்டையை கிளப்பி அரையிறுதிக்குள் நுழைந்தது பாடும் மீன்-

ஆசிரியர் - Editor II
வாலிப கிண்ணத் தொடர்!! -பட்டையை கிளப்பி அரையிறுதிக்குள் நுழைந்தது பாடும் மீன்-

இளவாலை வருத்தபடாத வாலிப சங்கம் நடாத்தும் வாலிப கிண்ண தொடரில் பலாலி விண்மீன் அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது குருநகர் பாடும் மீன்.

இளவாலை வருத்தபடாத வாலிப சங்கம் தனது 10 ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடாத்தும் அணிக்கு 9 பேர் உள்ளடக்கிய "வாலிப கிண்ணம்" மாபெரும் உதைபந்தாட்ட போட்டி நேற்று இளவாலை புனித கென்றியரசர் கல்லூரி மைதானத்தில்  மின்னோளியில்  இடம்பெற்றது.

இப்போட்டியில் குருநகர் பாடும் மீன்  அணியை எதிர்த்து பலாலி விண்மீன் அணி மோதியது. 

போட்டி ஆரம்பித்த சில நிமிடங்களில் பாடும் மீன் வீரர் கீதன் அபார கோலை  பெற்றுக்கொடுக்க ஆட்டம் பொறிபறந்தது. பின்னர்

இரு அணிகளும் எதிரணி கோல்கம்பங்களை மாறி மாறி ஆக்கிரமித்த போதிலும் இரு அணிகளும்  வாய்புக்களை தவறவிட முதல் பாதியாட்டம்  01:00  என முடிவுற்றது.

இரண்டாவது பாதியாட்டம் ஆரம்பத்திலிருந்து ஆட்டம் சூடுபிடித்தது. விண்மீன் அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த பதிலுக்கு பாடும் மீன் பின்களவீரர்கள் மற்றும் கோல்காப்பாளர் தனது சிறப்பான காப்பின் மூலம்  கோல்களை கட்டுப்படுத்த  ஆட்டம் இன்னும் வீறு கொண்டது.

பின்னர் பாடும்மீன் அணியின் விஷோத்தின் சிறப்பான கோலின் மூலம் பாடும் மீன் தனது  2 கோல் போட மைதானமே அதிர்ந்தது. 

பின்னர் மிகச் சிறப்பாக விளையாடிய இரு அணியும்   கோல் போடுவதற்காக  போராடிய போதும் இறுதி நேரத்தில் பாடும்மீன் முன்கள  வீரர் கீதன் மீ்ண்டும் ஒரு    கோலை  போட ஆட்டம்  03:00 என்ற கோல் கணக்கில் பலாலி  விண்மீன் அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது குருநகர் பாடும் மீன் அணி.

போட்டியில் பாடும் மீன் அணி வீரர் கீதன் 2 கோல்களையும் விஷோத்  ஒரு கோலையும் பெற்று கொடுத்தனர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக குருநகர் பாடும் மீன் அணியின் வீரர் கோல்காப்பாளர் கொட்வின் தெரிவு செய்யப்பட்டார்.