கைபேசி வெளிச்சத்தில் சிகிச்சை வழங்கி இருவரின் உயிரை காப்பாற்றிய வைத்தியர்கள்
இந்தியாவின் ஆந்திர மாநிலம், பார்வதிபுரம் மண்டலம், கும்ம லட்சுமி புரத்தை சேர்ந்த 8 பேர் முச்சக்கர வண்டியில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக முச்சக்கர வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் 2 பேர் படுகாயமும், 6 பேர் சிறு காயமும் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை அயலவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குருபம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயம் அடைந்த 2 பேருக்கு வைத்தியசாலையில் அவசர சிகிச்சை வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் அறிவிக்கப்படாத அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு காரணமாக இன்வெர்ட்டர் செயல் இழந்துவிட்டது.
இதனால் மின்சாரம் இன்றி காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை வழங்க முடியாமல் வைத்தியர்கள் திணறினர். பின்னர் தங்களது கைபேசியில் உள்ள டார்ச் வெளிச்சத்தில் உரிய நேரத்தில் சிகிச்சை வழங்கினர்.
இதனால் 2 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன. இதனை அறிந்த பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வைத்தியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.