நிலவில் சந்திரயான் தடம் பதித்த இடத்துக்கு 'சிவசக்தி' என பெயர் சூட்டிய மோடி

ஆசிரியர் - Editor II
நிலவில் சந்திரயான் தடம் பதித்த இடத்துக்கு 'சிவசக்தி' என பெயர் சூட்டிய மோடி

சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் நிலவில் தரையிறங்கிய இடத்துக்கு 'சிவசக்தி' எனப் பெயர் சூட்டப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

வேளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி சனிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு பெங்களூரு வந்தார். ஹெச்.ஏ.எல் விமான நிலையத்தில் வந்திறங்கிய மோடிக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பா.ஜ.கவினர் மேள தாளம் முழங்க வரவேற்பு கொடுத்தனர். பின்னர் அங்கிருந்து இஸ்ரோ மையத்துக்கு சென்றார்.

இஸ்ரோ மையத்தில் அதன் தலைவர் சோம்நாத் மற்றும் சந்திரயான் 3 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளை பிரதமர் மோடி சந்தித்து கைகளை குலுக்கியும், ஆரத்தழுவியும் பாராட்டினார். 

சோம்நாத் அவருக்கு லேண்டர் எடுத்தப் புகைப்படங்களை பரிசாக வழங்கினார். திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், மோடிக்கு லேண்டரின் மாதிரியை பரிசாக வழங்கினார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்

பின்னர் விஞ்ஞானிகள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:- லேண்டர் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியபோது நான் இங்கு விஞ்ஞானிகளுடன் இருக்க முடியவில்லை. ஆனால் என்மனம் முழுவதும் இங்குதான் இருந்தது.

வெற்றி பெற்றவுடன் முதலில் இஸ்ரோவுக்கு போக வேண்டும் என தோன்றியது. மாநாட்டை முடித்த கையோடு விஞ்ஞானிகளை நேரில் வாழ்த்த இங்கு வந்திருக்கிறேன்.

இந்த திட்டத்தின் காரணமான விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்புக்கு தலைவணங்குகிறேன். உங்கள் பொறுமைக்கும், கடின உழைப்புக்கும், உத்வேகத்திற்கும் தலைவணங்குகிறேன். இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நமது நாட்டின் பெருமையை, கவுரவத்தை நாம் உலகத்துக்கே நிரூபித்துள்ளோம்.

சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியில் பெண் விஞ்ஞானிகள் முக்கிய பங்கு வகித்துள்ளனர். அவர்களின் பங்களிப்பை போற்றும் வகையில் லேண்டர் நிலவில் தரையிறங்கிய இடத்துக்கு 'சிவசக்தி மையம்' என பெயர் சூட்டப்படும். வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய ஆகஸ்ட் 23 ஆம் திகதி ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும்.

கடந்த 2019-ம் ஆண்டு நிலவில் சந்திரயான்-2 லேண்டர் விழுந்து நொறுங்கிய இடத்துக்கு 'திரங்கா மையம்' எனப் பெயர் சூட்டப்படும். தோல்வி நிரந்தரமில்லை என்பதை காட்டவே இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு