சூரியனில் ஆய்வு செய்வதே எமது அடுத்த இலக்கு!! 'ஆதித்யா-எல்1' விண்கலம் தயார்; மோடி தெரிவிப்பு
சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் கலன் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை அடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், இஸ்ரோ விரைவில் சூரியனை ஆய்வு செய்ய விண்கலம் அனுப்பும் என்று தெரிவித்தார்.
தென்னாபிரிக்காவில் நடக்கும் பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி நிலவில் சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கிய நிகழ்வை நேரலையில் பிரதமர் மோடி பார்த்தார்.
இதன் பின்னர் அங்கிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
தென்னாப்பிரிக்காவில் இருந்தாலும், என் இதயம் எப்போதும் சந்திரயான் விண்கலம் திட்டத்துடனேயே இருந்தது. இந்தியா இப்போது நிலவில் கால் பதித்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய சாதனை படைத்துள்ள இஸ்ரோ மற்றும் அதன் விஞ்ஞானிகளுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்.
நிலவின் தென் துருவத்தில் இதுவரை எந்த நாடும் விண்கலத்தை தரையிறக்க முடியவில்லை. இந்த சாதனையை இந்தியா படைத்துள்ளது.
இது இந்தியாவால் எதையும் சாதிக்க முடியும் என்பது நிரூபணமாகி உள்ளது. அடுத்ததாக சூரியனை ஆய்வு செய்வதற்கு 'ஆதித்யா-எல்1' விண்கலத்தை இஸ்ரோ அனுப்பும்.
இதுபோல மனிதனை விண்ணுக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டம், வெள்ளி கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் திட்டத்தையும் இஸ்ரோ வெற்றிகரமாக செயல்படுத்தும் என்றார்.