விஜய் அரசியலுக்கு வந்தால் நடிப்புக்கு முழுக்கு? -வெளியானது புதிய தகவல்-

ஆசிரியர் - Editor II
விஜய் அரசியலுக்கு வந்தால் நடிப்புக்கு முழுக்கு? -வெளியானது புதிய தகவல்-

தமிழகத்தின் 234 தொகுதி பொறுப்பாளர்களுடன் மூன்று நாட்களுக்கு தளபதி விஜய் ஆலோசனை நடத்துகிறார். 

நேற்று செவ்வாய்க்கிழமை நடந்த முதல் நாள் கூட்டத்தில், ‘‘நான் அரசியலுக்கு வந்தால், அதில்தான் என் முழு கவனமும் இருக்கும். சினிமாவில் நடிக்க மாட்டேன்’’ என்று அவர் கூறியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அரசியலில் களமிறங்குவது குறித்து தளபதி விஜய் இதுவரை நேரடியாக எதுவும் தெரிவிக்கவில்லை என்றாலும்கூட, அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் அதை சார்ந்தே உள்ளதாக தெரிகிறது. 

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, கடந்த மே 28 ஆம் திகதி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் ஏழை மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சென்னை நீலாங்கரையில் ஜூன் 17 ஆம் திகதி நடந்த நிகழ்ச்சியில் ஊக்கத்தொகை வழங்கி தளபதி விஜய் பாராட்டினார்.

இதுமட்டுமின்றி, முக்கிய தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாளில் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வுகளும் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடத்தப்படுகின்றன. 

நேற்று செவ்வாய்க்கிழமை சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள தனது இல்லத்தில், தமிழகத்தின் 234 தொகுதிகளை சேர்ந்த மக்கள் இயக்க நிர்வாகிகளையும் சந்திக்க தளபதி விஜய் திட்டமிட்டுள்ளார். இதில் முதல்கட்டமாக, திண்டுக்கல், தேனி, அரியலூர் உள்ளிட்ட 10 மாவட்ட நிர்வாகிகளுடன் தளபதி விஜய் நேற்று ஆலோசனை நடத்தினார்.

சென்னையில் நடந்த கல்வி ஊக்கத் தொகை விழாவை சிறப்பாக நடத்திய பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அடுத்தகட்ட நடவடிக்கையாக, மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவது, இளம் வாக்காளர்களை கவர்வது ஆகியவை தொடர்பாகவும் இதில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

கூட்டம் முடிந்து வெளியே வந்த நிர்வாகிகள் கூறியதாவது:-

அரசியலுக்கு வருமாறு தளபதி விஜய்யை அழைத்தோம். ‘நான் அரசியலுக்கு வந்தால், அதில்தான் என் முழு கவனமும் இருக்கும். சினிமாவில் நடிக்க மாட்டேன்’ என்றார். 

அவரது அரசியல் வருகைக்கான அனைத்து கட்டமைப்புகளையும் செய்து விட்டோம். அவர் கைகாட்டியதும் அரசியல் பணியை ஆரம்பித்து தொடங்கி விடுவோம். தளபதி விஜய் எப்போது அரசியலுக்கு வந்தாலும் பணியாற்ற தயாராக உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு