புதிய பாராளுமன்ற கட்டடம் ஜனநாயகத்தின் கோவில்!! -இந்திய பிரதமர் மோடி பெருமிதம்-
வரலாற்று சிறப்புமிக்க இந்தியாவின் புதிய நாடாளுமன்றம் வெறும் கட்டடம் அல்ல, அது ஜனநாயகத்தின் கோயில் என இந்தியா பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
புதிய நாடாளுமன்றத்தை திறந்த இந்த நாள் வரலாற்று சிறப்புமிக்கது. இது வெறும் கட்டிடம் அல்ல. இந்திய மக்களின் கனவுகளைப் பிரதிபலிக்கிறது. இது ஜனநாயகத்தின் ஆலயமாக விளங்கும். புதிய பாதைகளில் பயணம் செய்வதே புதிய குறிக்கோள்களை அடைய முடியும்.
புதிய நாடாளுமன்ற கட்டடமானது இந்தியாவின் வளர்ச்சி, உலகின் வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது. இந்தியா புதிய பயணத்தை இன்று ஆரம்பித்துள்ளது. நாடாளுமன்றத்தில் புனிதமான செங்கோல் நிறுவப்பட்டிருக்கிறது. நேர்மை, நீதிக்கு ஒரு அடையாளமாக செங்கோல் திகழ்ந்தது. ஆதீனம், ராஜாஜி ஒருங்கிணைப்பால் செங்கோல் உருவாக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் செங்கோல் நாம் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும். செங்கோல் தற்போதுதான் சரியான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதிகாரம் மாற்றத்திற்கான அடையாளம் செங்கோல்.
சோழர் காலத்தில் நீதி மற்றும் நல்லாட்சியின் அடையாளமாக செங்கோல் விளங்கியது. புனிதமான செங்கோலின் பெருமையை மீட்டெடுக்க முடிந்தது நமது அதிர்ஷ்டம். 900 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் ஜனநாயக பாரம்பரியம் கடைபிடிக்கப்பட்டது.
ஆங்கிலேயர் காலத்தில் அதிகாரப்பகிர்வுக்கு பயன்படுத்தப்பட்ட செங்கோலுக்கு உரிய மதிப்பு அளித்துள்ளோம். புதிய நாடாளுமன்ற வளாகம் அனைத்து இந்தியர்களுக்கும் பெருமிதம் அளிக்கும். புதிய நாடாளுமன்றம் தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது. 9 ஆண்டுகளில் எழை மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றம் ஏழை, எளிய மக்களின் குரலாக ஒலிக்கும்' என்றார்.
நாடாளுமன்ற திறப்பு விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். நமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவுபெற்றதை நினைவுகூறும் வகையில் 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். இதேபோல் புதிய நாடாளுமன்றம் திறப்பு விழாவை நினைவு கூறும் வகையில் புதிய தபால் தலைகளையும் வெளியிட்டார் பிரதமர் வெளியிட்டு வைத்தார்.