SuperTopAds

யாழ்ப்பாணத்தில் மதங்களுக்கிடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் துண்டுப்பிரசுர விநியோகம்! யாழ்.ஆயர் இல்லம் விளக்கம்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்தில் மதங்களுக்கிடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் துண்டுப்பிரசுர விநியோகம்! யாழ்.ஆயர் இல்லம் விளக்கம்..

யாழ்.மாவட்டத்தில் திட்டமிட்டு மதங்களுக்கிடையில் குரோதத்தை துாண்டும் வகையில் மத்திய கலாச்சார நிலையத்தின் பின்னால் மாதா சொரூபம் வைக்கப்படவுள்ளதாக போலியான துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யப்படுவதாக யாழ்.ஆயர் இல்லம் தொிவித்துள்ளது. 

துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ள படி, யாழ்.மறை மாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய ஜஸ்ரின் ஞானப்பிரகாசத்தினால் புதுமை மாதா சொரூபம் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையக் கட்டடத்துக்குப் பின்புறமாகத் திறந்து வைக்கப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளமை உண்மைக்குப் புறம்பானதொன்றாகும் என்றும் ஆயர் இல்லம் மறுத்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் புதுமை மாதா சிலை நிறுவும் நிகழ்வு என்ற தலைப்பில் துண்டுப் பிரசுரமொன்று முகப்புத்தகம் உட்படச் சமூக ஊடகங்களில் பேசுபொருளாக உலா வந்தது. 

இதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் யாழ்.மறை மாவட்ட ஆயர் இல்லத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோதே ஆயர் இல்லத்தின் குரு முதல்வர் பி.ஜே ஜெபரட்ணம் அடிகளார் அந்தத் துண்டுப் பிரசுரம் போலியானதொன்று எனவும் அதில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் குறிப்பிட்டார்.

மேலும் மதங்களுக்கிடையிலான நல்லுறவைக் குழப்பும் வகையில் இத்தகைய நடவடிக்ககைளில் ஈடுபடும் தீய சக்திகள் குறித்து பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

இந்தத் துண்டுப் பிரசுரத்தில் “402 ஆவது யுபிலி ஆண்டுத் திருப்பலியின் பின்னர் யாழ். குருநகர் புதுமை மாதா ஆலய வரலாறுகள் அடங்கிய நினைவுச் சிலையை ஆலயப் பங்குத் தந்தை அருட்பணி அருளானந்தம் ஜாவிஸ் அடிகளார் 

யாழ்.மறை மாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் புதுமை மாதா சிலை திறந்துவைக்கப்படுடம்” என எழுத்துப் பிழைகளுடனும், மத முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையிலான வாசகங்களும் உள்ளடக்கியிருந்தது.