ஒவ்வொரு பாடசாலையையும் உங்கள் வீடாக நினைத்து அதன் சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருங்கள்! வலய கல்விப் பணிப்பாளர்களுக்கு ஆளுநர் பணிப்பு...
வட மாகாணத்தில் உள்ள தமது வலய கல்வி அலுவலகங்களில் கீழ் உள்ள பாடசாலைகளை வீடாக நினைத்து பொறுப்புடன் செயல்படுங்கள் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சகல வலய கல்வி பணிப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
நேற்று சனிக்கிழமை யாழ்.பழைய பூங்கா வீதியில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் தலைமை அலுவலக்கத்தில் வடமாகாத்தை சேர்ந்த 13 வலயங்களின் கல்வி பணியாளர்களுக்கும் ஆளுநருக்கு இடையிலான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வடமாகாண பாடசாலைகளில் இருந்து ஆளுநர் செயலகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை ஒவ்வொன்றாக திரையில் காண்பிக்கப்பட்டது.
முதலாவதாக யாழ்.மாவட்டத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் மாணவர்கள் பயன்படுத்தும் மலசல கூடம் கவனிப்பார் அற்ற நிலையில் இருப்பது தொடர்பில் ஆளுநர் செயலகத்திற்கு கிடைக்கப்பெற்ற காணொளி திரையில் காண்பிக்கப்பட்டது.
அதேபோல வடமராட்சி வலையத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றின் கட்டட ஒப்பந்தத்திற்காக மூன்று ஒப்பந்தக்காரர்கள் நியமிக்கப்பட்டும் வேலைகள் பூர்த்தியாக்கப்படவில்லை.
கிளிநொச்சி திரேசா பாடசாலையில் மாணவர்களுக்கு கற்பிக்கும் சில பாடங்களுக்கான நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்காமை மற்றும் சாந்தபுரம் பாடசாலை ஒன்றில் உயர்தர மாணவர்கள் சடுதியாக பாடசாலையை விட்டு வேறு பாடசாலைக்கு மாறியமை.
முல்லைத்தீவு வலயத்தில் உயர்தர மாணவர்களுக்கான நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்காமை மற்றும் மாணவி ஒருவர் வளர்ப்புத் தந்தையால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியமை.
வடமாகாண பாடசாலைகள் பலவற்றுக்கு வழங்கப்பட்ட zoom வகுப்பறை செயற்பாடுகள் மந்தகதியில் இடம் பெறுகின்றமை தொடர்பில் ஆளுநர் செயலகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் ஆளுநர் வலையக் கல்விப் பணிமணையிடம் கேள்வி எழுப்பினார்.
இறுதியாக ஆளுநர் தெரிவிக்கையில் ஒவ்வொரு வலையக்கல்விப் பணிப்பாளர்களும் தமது வலயத்தில் உள்ள பாடசாலைகளை தமது வீடாக எண்ணி தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்ததுடன் மாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் செயலாளர் அவற்றை உரிய முறையில் மேற்பார்வை செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அ.உமா மகேஸ்வரன், மாகாண கல்வி பணிப்பாளர் யோன் குயின்ரேஸ், மற்றும் வலையக் கல்விப் பணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.