SuperTopAds

யாழ்.அனலைதீவில் கனடா நாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் இருவர் சிக்கினர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.அனலைதீவில் கனடா நாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் இருவர் சிக்கினர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்..

யாழ்.அனலைதீவுக்கு கனடாவிலிருந்து வருகை தந்த வயோதிப தம்பதியை தாக்கி கொலை செய்ய முயற்சித்ததுடன், பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட இருவர் நேற்று (15) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் பருத்தித்துறையைச் சேர்ந்த 32 மற்றும் 24 வயதுடையவர்கள் ஆவர். கனடாவில் வசிக்கும் அனலைதீவைச் சேர்ந்த நாகலிங்கம் சுப்ரமணியம் (குருசாமி) என்ற 75 வயதுடைய நபரே இந்த கொலை முயற்சியின்போது சந்தேகநபர்களால் தாக்கப்பட்டு, படுகாயமடைந்திருந்தார்.

இந்நிலையில், அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததையடுத்து, தற்போது கனடா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் தெரியவருவதாவது:

கடந்த பெப்ரவரி 23ஆம் திகதி அனலை தீவில் வீடு புகுந்த வன்முறைக் கும்பலொன்று, கனடாவிலிருந்து வருகை தந்து, அப்பகுதியில் வசித்த வயோதிப தம்பதியர் மற்றும் ஆசிரியர் உள்ளிட்ட மூவரை கடுமையாக தாக்கியது.அத்தோடு அக்கூட்டத்தினர் 4 கைப்பேசிகள், 4 தங்க வளையல்கள் உள்ளிட்ட 13 லட்சம் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றனர்.

இந்த தாக்குதல் மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.அதன் அடிப்படையில், கடந்த மாதம் அரியாலை பூம்புகாரைச் சேர்ந்த 21 வயதுடைய நபரொருவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் முன்னெடுக்கப்பட்டு வந்த மேலதிக விசாரணைகளுக்கமையவே, இச்சம்பவத்தோடு தொடர்புடைய முதன்மை சந்தேக நபர் உள்ளிட்ட இருவர் நேற்று கைதாகியுள்ளனர். சம்பவம் குறித்து பொலிஸார் இவர்களை தொடர்ச்சியாக விசாரிக்கையில், கனடாவிலிருந்து பணம் அனுப்பப்பட்டு, 

இந்தியாவிலிருந்து நட்பு ரீதியாக வந்த கட்டளைக்கிணங்கவே இத்தாக்குதலில் தாம் ஈடுபட்டதாக சந்தேக நபர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதன்படி, கனடாவில் உள்ள ஒருவர் மற்றும் இந்தியாவில் வசிக்கும் ஒருவரின் மூலமாக ஒருங்கிணைந்து இந்த தாக்குதலை திட்டமிட்டு நடத்தியதாக முதன்மை சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளிக்கையில், இந்தியாவில் வசித்த வரதன் என்பவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டார். அதனால் திட்டமிட்டபடி எதுவுமே செய்ய முடியவில்லை. வேலணைக்குச் சென்று மீன்பிடிப் படகை வாடகைக்கு பெற்று, அதன் ஊடாக அனலைதீவுக்குச் சென்று, 

எமக்கு அடையாளம் காட்டப்பட்ட வயோதிபர் மற்றும் அவரை சார்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினோம். அதன் பின்னர் அவர்களது நகைகள், கைப்பேசிகளை எடுத்துக்கொண்டு தப்பி வந்துவிட்டோம் என கூறியுள்ளார். இவ்வாறு தொடர்ந்த விசாரணைகளின்போது இவ்விரு சந்தேக நபர்களிடமிருந்தும் கொள்ளையிடப்பட்ட தங்க வளையல்கள் மற்றும் மோதிரங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் சந்தேக நபர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று முற்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.