யாழ்.அச்சுவேலியில் சமுர்த்தி கொடுப்பனவை அதிகரித்துக் கொடுப்பதாக கூறி பெண் ஒருவரிடம் மோசடி கும்பல் கைவரிசை..!
யாழ்.அச்சுவேலி - வளலாயில் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து சமுர்த்தி கொடுப்பனவை அதிகரித்து வழங்குவதாக தெரிவித்து தனிமையில் இருந்த விசேட தேவையுடைய பெண்ணிடம் இனந்தெரியாத ஒருவரால் பணம் அபகரிக்கப்பட்டுள்ளது.
இன்று மதியம் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த நபர் ஒருவர் கோப்பாய் பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் பிரிவிலிருந்து வருகை தந்துள்ளதாக தெரிவித்து
தையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குறித்த பெண்ணிடம் அடுத்துவரும் மாதங்களில் அரசாங்கம் ஐயாயிரம் ரூபாய் சமுர்த்தி கொடுப்பனவை பத்தாயிரம் ரூபாயாக அதிகரித்து வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனவே அதற்காக தாம் ஒவ்வொரு சமுர்த்தி பயனாளிகளிடமிருந்தும் 20 ஆயிரம் ரூபாய் பணத்தினை அளவிடுகிறோம்.
என தெரிவித்து நான்கு படிவங்களைக் கொடுத்து அதில் கையொப்பமிட்டு வழங்குமாறு கூறி அவரிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார்.
தன்னிடம் தற்போது அவ்வளவு தொகை பணம் இல்லை அயலிலுள்ளவர்களிடம் பெற்றுத்தான் வழங்க வேண்டும் என வயதான பெண் தெரிவித்த போதிலும்
பணம் உடனடியாக வழங்காவிட்டால் எதிர்வரும் மாதங்களில் சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்பட மாட்டாது என தெரிவித்து வலுக்கட்டாயமாக குறித்த பணத்தினை பெற்றுள்ளார்.
பணத்தினை பறி கொடுத்த பெண் தனிமையில் இருந்த நிலையிலே வந்திருப்பவர் முகக்கவசத்தினை அணிந்தவாறு உடனடியாக பணத்தை வழங்க வேண்டும் என்று கடுந்தொனியில் தெரிவித்ததால்
தனக்கு இது மோசடி என சந்தேகம் ஏற்பட்ட போதிலும் பணத்தை வழங்காவிட்டால் தனது உயிருக்கு ஏதேனும் விபரீதம் நிகழலாம் என்ற அச்சத்தினால் பணத்தை வழங்கிவிட்டு
தொலைபேசி ஊடாக அயலவர்களுக்கு தெரிவிக்கலாம் என முயற்சித்தபோது தனது சிமாட் கையடக்க தொலைபேசி ஒன்றும் அங்கிருந்து களவாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தொலைபேசி களவாடப்பட்டமை தொடர்பாகவும் டயலொக் தொலைபேசி நிறுவனத்திற்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் அதேவேளை கடந்த வாரம் நீர்வேலி பகுதியிலும் இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெற்று அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவாகியுள்ளது.
இவ்வாறு யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பிரதேச செயலகத்திலிருந்து பதிவினை மேற்கொள்ள வருவதாக தெரிவித்து பல பண மோசடிகள் இடம் பெற்றுள்ளன.
எனவே இவ்விடயம் தொடர்பில் பொதுமக்களை மிக அவதானமாக இருக்குமாறு பிரதேச செயலர் மற்றும் கிராம சேவையாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.