இந்தியா உடன் தலையிடவேண்டும்! வடக்கிற்குவரும் தெற்கு தலைவர்கள் சந்திப்பை புறக்கணிப்போம் - நல்லை ஆதீன முதல்வர்..
சைவ சமயத்திக்கும், தமிழ் மக்களுக்கும் எதிரான அநீதிகளை தென்னிலங்கை அரசியல்வாதிகள் தடுக்கவேண்டும் எனவும், இந்தியா இந்த விடயத்தில் தலையிடவேண்டும் எனவும் சைவ சமய அமைப்புகள தீர்மானித்துள்ளதாக நல்லை ஆதீன முதல்வர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சைவ சமயம் சார்ந்த அமைப்புக்கள், கோவில் தர்மகர்த்தா சபையினர், ஆதீன கர்த்தாக்கள். கோவில் நிர்வாகத்தினைச் சேர்ந்த ஆகியோரால் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில்,
ஆதீன முதல்வரின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களாக இலங்கை சுதந்திரம் அடைந்த 1948ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை தமிழ் மக்களுக்கு எதிராக இனரீதியான, மதரீதியான கலாச்சார ரீதியான ஒடுக்கு முறைகள்.
தமிழ் பிரதேசங்களில் அத்துமீறிய குடியேற்றங்கள் தென்னிலங்கை அரசின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக தமிழ் மக்கள், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தமிழ்த் தலைமைகள் பல தடவைகள் இதற்கெதிராகக் குரல் எழுப்பி வந்தும் இதற்கான தீர்வுகள் இலங்கை அரசிடமிருந்து கிடைக்கவில்லை.
தமிழ் மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளுக்குப் பின் 1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதிகாரம் பரவலாக்கப்பட்டு வடக்கு கிழக்கு மாகாணம் தற்காலிகமாக இணைக்கப்பட்டு வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபை உருவாக்கப்பட்டது.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணம் தமிழர்களின் பூர்வீக தாயகம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு சில அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை கொடுக்கப்பட்ட அதிகாரங்கள் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை.
அத்துடன் கொடுக்கப்பட்ட அதிகாரங்களும் இலங்கை அரசால் மீளப்பெறப்பட்டுள்ளது. இது தமிழ் மக்களை அடிமையாக்கும் முயற்சியாகவே நாம் கருதுகிறோம்.
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் மற்றும் ஆயுதப் போராட்டம் நிறைவடைந்த பின் வடக்குகிழக்குப் பகுதிகளில் உள்ள தமிழர் தாயகப்பகுதிகளில் தமிழர் அல்லாதோரை மிக வேகமாகக் குடியேற்றுவதும், தமிழ் மக்களின் வழிபாட்டுத் தலங்கள்.
கோவில்களை அழிப்பதும், தொல்பொருட் திணைக்களம், வனவளத்திணைக்களம், வனஜீவராசித் திணைக்களம் போன்றவற்றினூடாக தமிழ் பகுதிகளில் உள்ள நிலங்களை ஆக்கிரமிப்பதும் மிகவேகமாக நடைபெறும் அன்றாட நிகழ்வுகளாக நாம் கருதுகிறோம்.
மேலே குறிப்பிட்ட சம்பவங்கள் தொடர்பாக இலங்கை அரசுக்கு தமிழர் தரப்பால் பலதரப்பட்ட முறைப்பாடுகள் செய்தும், நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுத்தும் எந்தவித பயனையும் நாம் அடையமுடியவில்லை.
இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக நீதி வழங்கும் முறைமையில் தமிழ் மக்களுக்கு பாரிய சந்தேகம் நிலவுகின்றது. ஒரேநாடு ஒரேசட்டம் என்ற கொள்கை பின்பற்றப்படுவதில்லை என்பதை தமிழ் மக்கள் உணர்கிறார்கள்.
இலங்கையில் மதமாற்ற தடைச்சட்டம் உடனடியாக ஏற்படுத்த வேண்டும். சமீபத்தில் கிறீஸ்தவ போதகராகிய சக்திவேல் ஆணையிறவில் நடராசர் வடிவ சிலை வைக்கப்பட்டதைக் கண்டித்து பத்திரிகைகளில் அறிக்கை விட்டதுடன் சிவபூமியாக வடக்கு கிழக்கை சிலர் ஆக்க முயற்சி செய்கிறார்கள் என எள்ளி நகையாடியமையை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இலங்கைக்குரிய ஒரு சைவத்தமிழ் பெயர் சிவபூமி. அவரது கூற்றை சபையினர் முழுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இந்தியா ஆதிச் சமயமாகிய சைவசமயத்தையும் சைவாலயங்களையும் பாதுகாப்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தென்னிலங்கையில் இருந்து வரும் அரசியல் தலைவர்கள் மேற்குறித்த பிரச்சினைகளுக்கு பதில்தராவிடில் அவர்கள் வடக்கே வரும் போது அவர்களின் சந்திப்புக்களை சைவசமயத் தலைவர்கள் தவிர்க்க வேண்டும். மேற்குறித்த தீர்மானங்கள் யாவும் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.