யாழ்ப்பாணத்தில் சினிமா பாணியில் நடந்த மோசடி! வாடகை காரை 65 லட்சம் ரூபாய்க்கு ஈடுவைத்த கும்பல் சிக்கியது...
யாழ்.உரும்பிராயில் வாடகைக்கு வாங்கிய கார் ஒன்றினை மானிப்பாயில் 65 லட்சம் ரூபாய்க்கு ஈடு வைத்த குற்றச்சாட்டில் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, உரும்பிராய் பகுதியில் வாடகைக்கு வாகனங்களை வழங்கும் நபர் ஒருவரிடம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மூவர் சென்று கார் ஒன்றினை வாடகைக்கு பெற்று சென்றுள்ளனர்.
அதற்காக ஒரு இலட்சம் ரூபாய் முற்பணமும் வழங்கியுள்ளனர். காரினை பெற்று சென்றவர்கள் சில தினங்களில் காரில் இருந்த GPS கருவியினை அகற்றியுள்ளனர். அது காரினை வாடகைக்கு கொடுத்த நபருக்கு தெரியவந்ததை அடுத்து
வாடகைக்கு காரினை பெற்றவர்களுக்கு தொடர்பினை ஏற்படுத்தியபோது, அவர்களது தொடர்புகள் துண்டிக்கப்பட்டு இருந்தது. அது தொடர்பில் உடனடியாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தவேளை குறித்த கார் மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்று,
குறித்த வீட்டுக்கு சென்று காரினை மீட்டனர். காரினை வீட்டில் வைத்திருந்தவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்தபோது , காரினை ஈடு வைத்து தம்மிடம் 65 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்று சென்றனர் என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காரினை வாடகைக்கு பெற்றவர், வாடகைக்கு பெற்ற காரினை ஓட்டி சென்ற சாரதி மற்றும் காரினை வாடகைக்கு பெறும்போது சாட்சி கையெழுத்து வைத்த நபர் ஆகிய மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.