கல்லீரல் காக்கும் கீழா நெல்லி
நம்முடைய பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிற மூலிகைகளில் கீழாநெல்லி மிகவும் முக்கியமானது. ஆனால், பலருக்கும் இதை மருந்தாக எவ்வாறு உபயோகிப்பது என்பது தெரியாது. இளந்தளிராக உள்ள கீழாநெல்லியைச் சாப்பிடுவதை பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அதனால், நமக்கு எந்தவிதமான மருத்துவப் பயனும் கிடைக்காது. எனவே, நன்றாக வளராத கீழாநெல்லி இலைகளை மருந்தாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.
பொதுவாக, இம்மூலிகை குறைந்தபட்சம் இரண்டு அடி உயரமாவது வளர்ந்திருக்க வேண்டும். இலைகளுக்குக் கீழே காய்கள் காணப்பட வேண்டும். அவ்வாறு வளர்ந்த கீழாநெல்லி இலைகளில்தான் Phyllanphin, Hypo Phyllanpin என்ற இரண்டு வேதிப்பொருள் உருவாகும்.
இதுதவிர, அல்கலோய்ட் ((Alkaloid) என்கிற வேதிப்பொருளும் இந்த செடியில் இருக்கும்.
சித்த மருத்துவத்தில் கீழாநெல்லி இலைகளை எந்தக் காரணத்துக்காகவும் தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயமாக குடிக்கக் கூடாது. அவ்வாறு செய்தால், இந்த மூலிகையில் உள்ள வேதிப்பொருட்களின் செயலாற்றும் தன்மை மெல்லமெல்ல குறையும்.
இந்த இலைகளுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து 10 கிராம் அளவு வெள்ளாட்டுப்பால் அல்லது மோரில் கலந்து 3 முதல் 5 நாட்கள் வரை சாப்பிட்டு வரலாம். இந்தக் கலவையைச் சித்த மருத்துவத்தில் ‘கற்கம்’ எனக் குறிப்பிடுவார்கள்.
இரத்தப் பரிசோதனை, இரத்தத்தை மாற்றுதல், பல பெண்களுடன் பாதுகாப்பற்ற முறையில் உறவு கொள்தல் போன்ற காரணங்களால் பரவுகிற ஹெப்படைட்டிஸ்பி, ஹெப்படைட்டிஸ்சி போன்ற நோய்த் தொற்றுகளைக் குணப்படுத்தும் தன்மை கீழாநெல்லிக்கு இருக்கிறது. ஒருவருக்கு பல நாட்களாக ஹெப்படைட்டிஸ்பி மற்றும் சி பாதிப்பு இருந்தால் கல்லீரலை முடக்கிவிடும். இதன் காரணமாக, கல்லீரலில் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புள்ளது.
கீழாநெல்லி இலையை மாத்திரையாகவும் செய்து ஒரு மாதம் வரை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். இதன்மூலம் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதத்தினரை முழுமையாக குணப்படுத்தலாம். மீதமுள்ள 40 சதவீதத்தினர் தொடர்ந்து கீழாநெல்லியைச் சாப்பிட்டு வருவது அவசியம்.
ஹெப்படைட்டிஸ்பி மற்றும் சி நோய்களைக் குணப்படுத்துவதோடு, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைக்கவும், கல்லீரலில் சேர்கிற அளவுக்கு அதிகமான கொழுப்பைக் கரைக்கவும், மதுப்பழக்கத்தை நிறுத்துவதற்கும் இம்மூலிகை பெருமளவில் உபயோகிக்கப்படுகிறது.
அது மட்டுமல்லாமல், பித்தம் காரணமாக ஏற்படுகிற முடி நரைத்தல் மற்றும் உதிர்தல் போன்ற பிரச்சினைகளையும் கீழாநெல்லி குணப்படுத்துகிறது. சித்த மருத்துவத்தில் கீழாநெல்லிக்கு மாற்று மருந்தாக மேலாநெல்லி உபயோகப்படுத்தப்படுகிறது.