தரைவழிப்பாதை திறந்துவிடப்படாத மயிலிட்டி துறைமுகம் புனரமைப்பாம்?

ஆசிரியர் - Admin
தரைவழிப்பாதை திறந்துவிடப்படாத மயிலிட்டி துறைமுகம் புனரமைப்பாம்?

தரைவழிப்பாதைகள் திறக்கப்படாது வெறுமனே விடுவிக்கப்பட்ட மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை மறுசீரமைப்புச் செய்து, மீண்டும் செயற்படுத்த அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

யுத்தத்தால் மோசமாகச் செயலிழந்த யாழ்ப்பாணம், வலிகாமம் பிரதேசத்தில் அமைந்துள்ள மயிலிட்டி மீன்பிடித் துறைமுகமும் அதனுடன் தொடர்புபட்ட 54 ஏக்கர் காணியும், மீன்பிடி நடவடிக்கைகளுக்காக இவ்வருடம் விடுவிக்கப்பட்டது.

ஆனால் விடுவிக்கப்பட்ட துறைமுகப்பகுதிக்கு கடல் வழியாகவே போக்குவரத்து தொடர்புகள் உள்ளது. தரை வழிப்பாதையினை திறந்துவிட அரசு பின்னடித்துவருகின்றது.
இந்நிலையில் மயிலிட்டியிருந்து இடம்பெயர்ந்துள்ள மீனவர்கள் தற்போது வசித்துவருகின்ற வடமராட்சியின் கரையோர கிராமங்கள் நெரிசலுக்குள்ளாகியுள்ளன.

படகுகளை தரிக்கும் துறைமுகவசதிகளும் அற்ற நிலையே காணப்படுகின்றது.அதனால் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தைப் பயன்படுத்துவதற்கு மீனவர்கள் முன்வந்துள்ளனர்.

கடந்த 30 வருடங்களிற்கு மேலாக பராமரிப்பின்றி, மோசமாக செயலிழந்துக் காணப்படுகின்ற குறித்த துறைமுகத்தை, மீளப் பயன்படுத்துவதற்கு ஏதுவான வகையில், மறுசீரமைப்புச் செய்வதற்கான வேலைத்திட்டங்களை துரித கதியில் ஆரம்பிக்கப்போவதாக அரசு அறிவித்துள்ளது.

இதற்கு அவசியமான செயற்றிட்டங்களை மேற்கொள்வது தொடர்பில், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனைகளுக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மீனவர்கள் செல்வதற்காக பாதைகளை திறந்துவிட அரசு மறுத்துவருகின்ற நிலையில் துறைமுகம் புனரமைக்கப்படுவது யாருக்காகவென மீனவ அமைப்புக்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு