துருக்கி நிலநடுக்கம்!! -11 நாட்களுக்கு பின் சிறுவன் உள்ளிட்ட 3 பேர் உயிருடன் மீட்பு-
துருக்கி - சிரியாவில் கடந்த 6 ஆம் திகதி அதிகாலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகி உள்ளன.
பலியானோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியது. மேலும் பலர் கட்டட இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறும் நிலையில், பலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் நிலநடுக்கம் ஏற்பட்ட 11 நாட்களுக்குப் பின் துருக்கியில் நேற்று சிறுவன் உள்ளிட்ட 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
அன்டாக்யாவில் உஸ்மான் என்ற 14 வயது சிறுவன் 260 மணி நேரத்துக்குப் பின் மீட்கப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் பஹ்ரதின் கோச்சா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அத்துடன், மீட்கப்பட்ட சிறுவன் ஸ்ட்ரெச்சரில் கண்களைத் திறந்திருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார்.
மேலும் நிலநடுக்கத்தால் பேரழிவிற்குள்ளான ஹடாய் மாகாணத்தில் உள்ள அன்டாக்யாவில் உள்ள வைத்தியசாலைக்கு உஸ்மான் அழைத்துச் செல்லப்பட்டதாக அமைச்சர் கூறினார்.
இடிபாடுகளில் இருந்து சத்தம் கேட்டு உஸ்மானை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்ததாக அனடோலு மாநில செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. சிறுவனை மீட்ட ஒரு மணி நேரத்திற்குப் பின், மற்றொரு கட்டட இடிபாடுகளில இருந்து 26 மற்றும் 33 வயதுடைய இரண்டு நபர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இத்தகவலையும் மந்திரி கோச்சா கூறியுள்ளார். அவர்கள் சிகிச்சை பெறும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.