யாழ்.சாவகச்சோி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர், அவரது மனைவி, மைத்துனர் ஆகியோர் என்னை கடத்தி தாக்கினர்! குடும்பஸ்த்தர் வைத்தியசாலையில்...
யாழ்.சாவகச்சோி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் மற்றும் அவருடைய மனைவி, மைத்துனரால் கடத்தப்பட்டு தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்படும் குடும்பஸ்த்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. யாழ்.சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் தனது மைத்துனரை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட குடும்பஸ்த்தரை,
கிளிநொச்சி - கணேசபுரத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து காணி துப்புரவு செய்வதற்கென கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று, பின்னர் வாகனம் ஒன்றில் மாற்றி அழைத்து சென்று தாக்கியதாக பாதிக்கப்பட்ட குடும்பஸ்த்தர் கூறினார்.
பிற்பகல் 3 மணியளவில் அழைத்து சென்று வான் ஒன்றில் ஏற்றியதாகவும், பின்னர் சாராயத்தை கட்டாயப்யபடுத்தி பருக்கியதாகவும் அவர் தெரிவிக்கின்றார். தொடர்ந்து பரந்தன் பூநகரி வீதியை அண்மித்த இடத்தில் வைத்து சரமாரியாக தாக்கியதாகவும்,
அதானால் தான் சுயநினைவிழந்ததாகவும் பின்னர் வாய்க்கால் ஒன்றில் விழுந்து கிடந்ததாகவும் அவர் தெரிவிக்கின்றார். சம்பவத்தின்போது குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவியும் மற்றுமொரு நபரும் இருந்தாகவும் அவர் கூறினார்.
பொழுது சாய்ந்த நிலையில் தன்னை திருநகர் வீதியை அண்மித்த பகுதியில் வானிலிருந்து தள்ளி விழுத்திவிட்டு சென்றதாகவும் அவர் தெரிவிக்கின்றார். இதன்போது, தன்னை தாக்க வேண்டாம் எனவும்,
வீட்டில் கொண்டு சென்று விடுங்கள் என கதறிய போதும் அவர்கள் தாக்கி காயப்படுத்தியதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து நேற்று காலை கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும்,
கண்டல் காயங்கள், நோவுகளுடன் விறைப்பும் காணப்படுவதுடன், காதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் திருட்டு சம்பவம் இடம்பெற்றதாக தெரிவித்து,
திருட்டு பொருட்களை எங்கு வைத்திருக்கிறாய்? என விசாரித்தே தன்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவிக்கின்றார். இதேவேளை, குறித்த பொலிஸ் உத்தியோகத்தரும் அவரது மைத்துனரும்
கிளிநொச்சி குற்றத்தடுப்பு பொலிசாருடன் இணைந்து மற்றுமொரு வீட்டினையும், வர்த்தக நிலையத்தினையும் முறைப்பாடு எதுவுமின்றி வீட்டுரிமையாளர்கள் இல்லாதவேளை தேடுதல் மேற்கொண்டதுடன்,
அங்கு இருந்த சிறுவர்களையும் அச்சுறுத்தியிருந்தமை தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் பொலிஸ் உயர்பீடங்களிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.