வடமாகாணத்தில் அடுத்துவரும் 10 ஆண்டுகளுக்கு விவசாயம், கடற்றொழில், சுற்றுலாத்துறையை மேம்படுத்த நவீன வசதிகள் பயன்படுத்தப்படும் - ஜனாதிபதி ரணில்...
வடமாகாணத்தில் அடுத்து வரும் பத்து ஆண்டுகளுக்கு விவசாயம், கடற்றொழில், சுற்றுலாத் துறைகளை மேம்படுத்துவதற்கும், நவீன தொழில் நுட்பத்தைப் பின்பற்றுவதற்கும் அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளது.
இன்று நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நிலையில் இருந்து நாங்கள் மீண்டெழ வேண்டுமென்றால் பத்து வருடத்துக்கான அபிவிருத்தித் திட்டம் அவசியமானதாகும் என்றும், நாங்கள் இதுவரை பெற்ற கடன்களை மீளச் செலுத்த வேண்டியிருக்கிறது.
இந்த வருடமும், இனி வரும் சில வருடங்களும் கடன்களைப் பெற வேண்டியும் இருக்கிறது. இருக்கிற கடனையும், இனிப் பெறப்போகும் கடனையும் அடைக்க வேண்டிய தேவை இருக்கிறது என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (10) மாலை இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி குறித்த கலந்துரையாடல் ஒன்று
நேற்று பிற்பகல் யாழ்ப்பாணத்திலுள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நடைபெற்றது. அபிவிருத்தியின் பங்காளர்களான நிபுணர்கள், கல்வியியலாளர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், தொழில் முயற்சியாளர்கள்
மற்றும் கமக்காரர்கள் அபிவிருத்தியில் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் ஜனாதிபதியின் நேரடிக் கவனத்துக்குக் கொண்டுவரும் வகையில் ஜனாதிபதி செயலகத்தினால் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தக் கலந்துரையாடலில் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் எக்கநாயக்க,
வடமாகாண பிரதம செயலாளர் பந்துசேன, ஜனாதிபதியின் வட மகாண இணைப்பாளரும், மேலதிக செயலாளருமான இ.இளங்கோவன், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.பிரதீபன்
உட்பட அரச அதிகாரிகளும், பொலிஸ், இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்தச் சந்திப்பின்போது உரையாற்றிய ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில்,
நாங்கள் குறுகிய காலத்துக்குள் முடிக்க வேண்டிய பிரச்சினைகள் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். அவை தொடர்பில் நிதிப்பற்றாக்குறை இருக்கிறது. எதிர்காலத்தில் அவை பற்றிப் பேசித் தீர்மானம் எடுப்போம்.
இன்று நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நிலையில் இருந்து நாங்கள் மீண்டெழ வேண்டுமென்றால் பத்து வருடத்துக்கான அபிவிருத்தித் திட்டம் அவசியமானதாகும். நாங்கள் இது வரை பெற்ற கடன்களை மீளச் செலுத்த வேண்டியிருக்கிறது.
இந்த வருடமும், இனி வரும் சில வருடங்களும் கடன்களைப் பெற வேண்டியிருக்கிறது. இந்தக் கடனையும், இனிப் பெறப்போகும் கடனையும் அடைக்க வேண்டிய தேவை இருக்கிறது.
அதேநேரத்தில் அந்நியச் செலவாணிக் கையிருப்பையும்பேண வேண்டிய அவசியம் இருக்கிறது. எனவே ஒரு ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்குவது பற்றி நாங்கள் சிந்திக்கிறோம்.
மிகவும் போட்டித் தன்மை மிக்க ஒரு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை இருக்கிறது. நாங்கள் இதற்கென சில மாகாணங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்.
அந்த மாகாணங்களில் வடக்கு மாகாணமும் ஒன்று. இந்த விடயங்களை நாம் முன்னெடுத்து வரும் போது வடக்கின் பொருளாதாரம் மிகவும் உயர்ந்த நிலையை அடையும். வடக்கு, வட மத்தி மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே
நாங்கள் அபிவிருத்தி சார்ந்து மிக முக்கிய கவனம் செலுத்துகிறோம். விவசாயத்தை முன்னேற்றுவது எமது திட்டத்தின் முக்கிய அம்சமாகும். கிளிநொச்சியிலிருந்து குமண வரை நெல் உற்பத்தியைப் பெருக்குவதற்கான திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.
ஒரு ஏக்கரில் இருந்து ஏழு மெற்றிக் தொன் அறுவடையைப் பெற்றுக் கொள்வது எங்களுடைய இலக்காகும். இதற்காக நவீன தொழில்நுட்பத்தை உள்வாங்க வேண்டிய தேவை உள்ளது.
வடக்கில் நெல் உற்பத்தியை மேற்கொண்டால் ஏனைய பகுதிகளில் ஏற்றுமதி சார் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும். யாழ்ப்பாணத்தைப் பொறுத்த மட்டில் அடுத்து வரும் பத்தாண்டுகளுக்குள்.
உயர் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயத்தையும், கடற்றொழிலையும் மேம்படுத்துவதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம் . இந்திய மீனவர்களால் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் இழுவை மடிப் படகுப் பிரச்சினைக்கும்
அமைச்சர்களுடன் கலந்துரையாடி விரைவில் தீர்வைப் பெற்றுத் தர இருக்கிறோம். வடக்கு மாகாணத்துக்கான நீர் விநியோகம் தொடர்பில் மல்வத்து ஓயாவில் இருந்து நீரைக் கொண்டு வருவதற்கான திட்டமொன்றையும் நாங்கள் வைத்திருக்கிறோம்.
அத்துடன் ஆனையிறவு களப்புப் பகுதியில் உவர் நீரில்லாமல் நன்னீரைத் தேக்கி வைப்பதற்கான திட்டம் ஒன்றும், பூநகரி குளத்தையும் அபிவிருத்தி செய்யவுள்ளோம். மேலும், திருகோணமலையில் இருந்து மன்னார் வரை
சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வதற்கும், வடக்கிலுள்ள இந்து ஆலயங்களுக்கு இந்தியாவிலிருந்தும், மலேசியாவிலிருந்தும் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்கும், புதிய ஹோட்டல்களை அமைப்பதற்கும் திட்டமிட்டுள்ளோம்.
மாற்று வலு மின் உற்பத்தித் திட்டங்களும் இருக்கின்றன. அத்துடன் கடற்பகுதியில் காற்றாலை மின்னுற்பத்தி மற்றும் உயிர்வாயு உற்பத்தி பற்றியும் ஆராய்ந்து வருகிறோம். இதன் மூலம் நாட்டிலுள்ள பசுமை சக்தி உற்பத்தித் தேவைக்கு
வடமாகாணம் பங்களிக்கும் என்றார்.விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் உரத் தட்டுப்பாடு தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்த போது, "விவசாயத்தைப் பொறுத்தமட்டில் ஒரு விடயத்தைக் சொல்லியாக வேண்டும்.
இம்முறை உரத்துக்கான மானியத்தில் நெற்செய்கைக்காக மட்டுமே வழங்கியிருக்கிறோம். அரசாங்கத்துக்கு அது ஒரு உதவித்திட்டத்தின் கீழ் கிடைத்தது. அதனால் ஏனைய பயிர்களுக்கான உர மானியம் பற்றி
- அதனை எங்கிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்பது பற்றி ஆராய்ந்து வருகிறோம்" என்று குறிப்பிட்டார்.புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு வருகின்ற போது, அதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்வதில்
மிக நீண்டகால தாமதம் ஏற்படுகிறது. இந்தத் தாமதம் நீக்கப்பட வேண்டும். முதலீட்டாளர்களைப் பொறுத்த வரை குறுகிய காலத்துக்குள் நடைமுறைப்படுத்துவதையே விரும்புகிறோம் என்று
முதலீட்டாளர் ஒருவர் குறிப்பிட்டதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, இலங்கையில் முதலீடு செய்யவிரும்பும் வெளிநாட்டில் வதியும் இலங்கையர்களுக்கென நாங்கள் புலம்பெயர்ந்தோருக்கான முதலீட்டு அலுவலகங்களைத் திறந்துள்ளோம்.
அவ் அலுவலகங்கள் முதலீட்டாளர்களுக்கான சகல தேவைப்பாடுகளையும் மூன்று மாத காலத்துக்குள் பூர்த்தி செய்து தரும். அரச அலுவலகங்களில் இருக்கும் நடைமுறைத் தாமதங்கள் பற்றி நீங்கள் அறிவீர்கள்.
இவற்றை விரைவுபடுத்த அரசாங்கம் முயற்சி செய்யும் என்றார்.அத்துடன் அமைய அடிப்படையில் பணியாற்றும் சிற்றூழியர்களுக்கான நிரந்தர நியமனம், திக்கம் வடிசாலைப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்,
வீதி புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு தரப்பினரும் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.