SuperTopAds

மூடிய கண்களைத் திறக்கும் பேஸ்புக்!

ஆசிரியர் - Editor II
மூடிய கண்களைத் திறக்கும் பேஸ்புக்!

ஒரு போட்டோவில் இருப்பவரின் கண்கள் மூடியபடி இருந்தால் அவற்றை திறந்திருப்பது போல மாற்றும் அம்சத்தை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் சாத்தியப்படுத்தியுள்ளது பேஸ்புக்

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் தற்போது பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் பேஸ்புக் நிறுவனமும் அதில் முக்கியமான கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது. 

கண்கள் மூடிய நிலையில் இருக்கும் ஒருவரின் போட்டோவில், அந்த நபரின் கண்களை திறந்திருப்பது போல் மாற்றும் திறன் படைத்த செயற்கை நுண்ணறிவு செயல்முறையை பேஸ்புக் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளது. 

இதில் Intelligent In-painting என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தபடுகிறது. இதனை அடோப் நிறுவனம் தனது போட்டோஷாப் அப்ளிகேஷனில் புகுத்தியது. Content Aware Fill என்ற அம்சம் Intelligent In-painting முறையில் செயல்பட்டு, போட்டோவில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள குறையை சரிசெய்யும். அந்தப் போட்டோவிலேயே உள்ள மற்ற பகுதிகளுடன் ஒப்பிட்டுப்பார்த்து, ஊகத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட பகுதியில் மாற்றத்தைச் செய்யும்.

உதாரணமாக, மேஜை மீது ஒரு பந்து இருப்பது போல ஒரு போட்டோ எடுக்கப்பட்டுள்ளது என்றால், அந்த போட்டோவில் பந்தை மட்டும் நீக்க விரும்பினால் போட்டோஷாப்பில் Content Aware Fil என்ற அம்சம் பயன்படும். இதன் உதவியுடன் பந்து நீக்கப்பட்ட பின், போட்டோ எடுக்கப்பட்ட போது மேஜை மீது பந்து இல்லைவே இல்லை என்று சொல்லும் அளவு மாற்றம் ஏற்பட்டுவிடும். 

இதே முறையைத்தான் சற்று மேம்படுத்தி, குறிப்பாக போட்டோவில் ஒருவரது கண்களில் உள்ள குறைகளை மட்டும் சரிசெய்யும் நோக்கில் பேஸ்புக் செயற்கை நுண்ணறிவு செயல்முறை (Algorithm) ஒன்றைச் செய்துள்ளது. இதில் திறந்த நிலை கண்கள் பற்றியும் மூடிய நிலை கண்ணை திறந்த நிலை கண்ணாக மாற்றும் படிநிலைகளும் கற்பிக்கப்பட்டிருக்கும். இதனைப் பின்பற்றி மூடிய கண்களை திறந்திருப்பது போல் மாற்ற முடிகிறது. 

இந்த அம்சம் பேஸ்புக்கில் எப்போது, எவ்வாறு பயன்பாட்டுக்கு வரப்போகிறது என்பது பற்றி தகவல் இல்லை.