சமஷ்டி கோரிக்கையை இந்தியா நிராகரிக்காது ஆனால் சாத்தியமானதை முதலில் அடையுங்கள், 13ம் திருத்தமே உடனடி சாத்தியம்! தமிழ் கட்சிகளிடம் ஜெய்சங்கர் திட்டவட்டம்...

ஆசிரியர் - Editor I
சமஷ்டி கோரிக்கையை இந்தியா நிராகரிக்காது ஆனால் சாத்தியமானதை முதலில் அடையுங்கள், 13ம் திருத்தமே உடனடி சாத்தியம்! தமிழ் கட்சிகளிடம் ஜெய்சங்கர் திட்டவட்டம்...

13ம் திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதே உடனடி சாத்தியம் என கூறியுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.ஜெய்சங்கர், 13ம் திருத்தச்சட்டத்தை பூரணமாக நடைமுறைப்படுத்த இந்தியா அழுத்தம் கொடுக்கும். எனவும் கூறியுள்ளார். 

இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி.ஜெய்சங்கருக்கும் தமிழ்தேசியப் பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் ஒருமித்த சந்திப்பு நேற்று  கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றிருந்தது.

இந்தச் சந்திப்பில், தமிழரசுக்கட்சியின் சார்பில் இரா.சம்பந்தன், மாவை.சோ.சேனதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு(ஜனநாயக) சார்பில் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சுரேஷ்பிரேமச்சந்திரன், ஸ்ரீகாந்தா ஆகியோரும் 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் பங்கேற்றிருந்தனர். இந்தச் சந்திப்புக்கு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் அழைக்கப்பட்டிருந்தபோதும், தேர்தல் பணிகள் காரணமாக அவர் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையிலையில் சந்திப்பு ஆரம்பமானதும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ்த் தலைவர்கள் அனைவரையும் ஒருமித்துச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து சம்பந்தன், முதலில் கருத்துக்களை வெளியிட்டார். 

 “இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் சரித்திரீதியாக காணப்படுகின்ற உறவுகள் பற்றிக் சுட்டிக்காட்டியதுடன் தமிழ் மக்கள் இலங்கையின் பாகத்தில் சரித்திரபூர்வமாக வாழ்ந்து வருகின்றனர். ஆகவே அந்த மக்கள் உள்ளக சுயநிர்ணய உரித்துக்கு சொந்தமுறையவர்கள். 

இது ஐக்கிய நாடுகள் சாசனத்திலும் காணப்படுகின்றது உள்ளிட்ட விடயங்களை சுட்டிக்காட்டினார். இச்சமயத்தில் குறுக்கீடு செய்த அமைச்சர் ஜெய்சங்கர், நாடு தற்போது முக்கியமானதொரு காட்டத்தில் உள்ளது. 

பொருளாதார நிலைமகள் மிகவும் சீர்குலைந்துள்ள. இவ்வாறான நிலையில் அடுத்தகட்டம் நோக்கி உங்களது நிலைப்பாடுகள் எவ்வாறு உள்ளன என்று கோரியுள்ளார். அதன்போது, அதிகாரங்கள் பகிரந்தளிக்கப்பட்டு தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும். 

அதன் ஊடாகவே அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வினைக் காண முடியும் என்று சம்பந்தன் தெரிவித்துள்ளார்.இ ந்த விடயத்தில் இந்தியா கரிசனை கொண்டுள்ளது. அதற்கமைவாகவே 1987ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்ட அரசியலமைப்பில் 13ஆவது திருத்தச்சட்டம் மேற்கொள்ளப்பட்டது. 

இருப்பினும் அது இன்னமும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றார். 

இதனையடுத்து, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், 

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தனது நிலைப்பாடு ஏனையவர்களின் நிலைப்பாடுகளுடன் மாறுபட்டுக் காணப்படுவதாக குறிப்பிட்டதோடு, ஒற்றையாட்சிக்குள் 13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதானது தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கான அதிகாரங்களை பகிர்வதாக அமையாது. 

ஓற்றையாட்சிக்குள் அதிகாரங்கள் பகிரப்பட்டால் அவை மீண்டும் இலகுவாக மத்திய அரசாங்கத்திடம் மீளச் சென்றுவிடும். இதற்கு உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் உதாரணங்களாகக் காணப்படுகின்றன. 

ஆகவே, ஒற்றையாட்சிக்குள் 13ஆவது திருத்தச் சட்டத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு முழுமையான சமஷ்டி அடிப்படையில் தான் தமிழர்களுக்கான தீர்வு அமைய முடியும். அதன் மூலம் அந்த மக்களின் தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றார். 

இதன்போது, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சமஷ்டிக் கோரிக்கையை நான் நிராகரிக்கவில்லை. ஆனால் இலங்கையின் அரசியலமைப்பில் 13ஆவது திருத்தச்சட்டமே காணப்படுகின்றது. அதனைக்கூட இன்னமும் முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் இழுபறியான நிலைமைகள் காணப்படுகின்றன. 

இந்தியாவைப் பொறுத்தவரையில் 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தான் உடனடியாகச் சாத்தியமாகவுள்ளது. ஆகவே, 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு நாம் அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் அழுத்தங்களை வழங்குவோம். 

மேலும் 13ஆவது திருத்தச்சட்டத்தினை தற்போது ஏற்றுக்கொள்வதால் உங்களுடைய இலக்குகள் கோரிக்கைகள் அத்துடன் மட்டுப்படுத்தப்பட்டு விடாது. அத்துடன் 13ஆவது திருத்தசட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தவதற்கே தயக்கங்கள் அரசாங்கத்திடத்தில் காணப்படுகின்றபோது சமஷ்டி விடயங்கள் நீண்டகால அடிப்படையிலானது. 

அதற்குள் ஏனைய விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு நிறைவடைந்துவிடும். ஆகவே சாத்தியமான விடயத்தினை முதலில் அணுகவேண்டும் என்றார். 

இதனைத்தொடர்ந்து, சுமந்திரன், 

கஜேந்திரகுமாரின் கருத்தினை நான் முழுமையாக ஏற்றுக்கொள்வதோடு எமது நிலைப்பாடும் அதுவாகவே உள்ளது. எனினும் நாம் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம். அதில் எமக்கு முழுமையான நம்பிக்கைகள் இல்லை. 

இருப்பினும், நாம் கிடைத்த வாய்ப்பினை கைவிட்டவர்கள் என்ற குற்றச்சாட்டு ஏற்படக்கூடாது என்பதற்காக பேச்சுக்களில் பங்கேற்றோம். அதன் பின்னர் அரசாங்கத்திற்கு காலக்கெடுவொன்றை வழங்கியுள்ளோம்.

அதற்குள் உடனடிப் பிரச்சினைகள் மற்றும் அரசியலமைப்பில் உள்ள அதிகாரப்பகிர்வு விடயங்கள் ஆகியவற்றை முன்னெடுக்குமாறு கோரியுள்ளோம். இந்நிலையில் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமை நடைமுறைப்படுத்துவதற்கு இரண்டு மூன்று வருடங்களை கோரியிருக்கின்றார். 

அத்துடன் 2018இல் இணங்கிய காணிகளையே தற்போது விடுவிப்பதாக அறிவித்துள்ளார். ஏனைய அபகரிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் எவ்விதமான அறிவிப்புக்களும் இடம்பெறவில்லை என்றார். 

இதனையடுத்து, சித்தார்த்தன், 

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு, நாம் ஆறு கட்சிகளின் தலைவர்கள் கூட்டிணைந்து அனுப்பிய கடித்தில் அரசியலமைப்பில் காணப்படுகின்ற 13ஆவது திருத்தசட்டத்தினையே முதலில் முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளோம் என்பதை தாங்கள் அறிவீர்கள். 

அந்த விடயத்தில் இந்தியாவின் அழுத்தம் தொடர வேண்டும் என்றார். 

தொடர்ந்து, சுரேஷ்பிரேமச்சந்திரன், ஸ்ரீகாந்தா உள்ளிட்டவர்கள், 

நாடு பொருளாதார நெருக்கடிக்குள் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இதனை அடிப்படையாக வைத்து மாகாணசபைகளுக்கான தேர்தல் நான்கு வருடங்களாக முன்னெடுக்கப்படவில்லை. அதற்கான அதிகாரங்கள் முழுமையாக அமுலாக்கப்படவில்லை.

வடக்கு, கிழக்கில் அரசியல் பொருளாதார ஸ்திரமடையச் செய்வதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்திற்கும் குறித்த மாகாணங்கள் கணிசமான பங்களிப்பினைச் செய்ய முடியும். மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் மாகாணசபைகளுக்கான தேர்தல் பகுதிபகுதியாக நடத்தப்பட்டிருந்தது.

ஆகவே தற்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான தேர்தலை அரசாங்கம் நல்லெண்ண சமிக்ஞையை வெளிப்படுத்தும் முகமாக முன்னெடுக்க முடியும். அதேநேரம், இந்தியாவின் மாநிலங்களுக்கு வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டு வருவதற்கான அதிகாரங்கள் காணப்படுகின்றன. 

ஆனால் இலங்கையின் மாகாணங்களுக்கு அவ்விதமான அதிகாரங்கள் இல்லை. ஆகவே சிறப்பு ஏற்பாடாக அவ்விதமான அதிகாரத்தினை வழங்குவதற்கு மத்திய அரசாங்கம் அனுமதிகளை அளித்தால் இந்தியா மற்றும் புலம்பெயர் தரப்பு ஆகியவற்றின் ஊடாக முதலீடுகளை உட்கொண்டு வருவதற்கு முயற்சிக்கலாம்.

அதேநேரம், வடக்கில் ஐயாயிரம் கடலட்டைப் பண்ணைகள் ஸ்தாபிக்கப்படும் நிலையில் அதற்கான மூலங்களை சீன நிறுவனமே வழங்குகின்றது. இவ்விதமான சீனாவின் பிரசன்னங்களையும் கட்டுப்படுத்த முடியும். 

அத்துடன் பலாலி விமானநிலையத்தின் விமான ஓடுபாதையை விஸ்தரிப்பதன் ஊடாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பியநாடுகளின் விமானங்கள் வருகை தருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அதன் ஊடாக அந்நியச் செலாவணியை பெருமளவில் பெற்றுக்கொள்ள முடியும் என்றனர்.

இதனையடுத்து, மீண்டும் கஜேந்திரகுமார் 

சமஷ்டித் தீர்வு சம்பந்தமான கருத்துக்களை முன்வைத்தார். சம்பந்தன், வடக்கு, கிழக்கில் இந்தியாவின் முதலீடுகளை வலுவாக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தார். 

ஈற்றில், வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், 

இந்தியா திருகோணமலை எண்ணெய் குதங்கள் மற்றும் பொருளாதார வலயம் தொடர்பில் கரிசனைகளைச் செலுத்தியுள்ளதோடு, வடக்கிலும் முதலீடுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்று குறிப்பிட்டதோடு, 

சமஷ்டி விடயம் சம்பந்தமாக தான் ஏற்கனவே கூறிய கூற்றினை மீள நினைவுபடுத்தியதுடன் சந்திப்பு நிறைவுக்கு வந்தது. சந்திப்பில் கலந்துகொண்ட சுமந்திரன், சித்தார்த்தன், சுரேஷ்பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் மேற்படி கருத்துபகிர்வினை தெரிவித்தனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு