SuperTopAds

மனைவியை கொலை செய்த வழக்கில் சிறையில் இருந்த கணவர்!! -7 வருடங்களின் பின் வெளிவந்த உண்மை-

ஆசிரியர் - Editor II
மனைவியை கொலை செய்த வழக்கில் சிறையில் இருந்த கணவர்!! -7 வருடங்களின் பின் வெளிவந்த உண்மை-

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில், மனைவியைக் கொலை செய்த வழக்கில் கைதாகி பல வருடங்களாக கணவர் சிறையில் இருந்த நிலையில், அவரது மனைவி உயிரோடு இருப்பதை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

மெஹந்திபூர் பாலாஜி பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்ட பெண் தான், 7 வருடங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டதாகக் கண்டறியப்பட்டு, அந்த வழக்கில் கணவர் உள்பட 2 பேர் சிறைத் தண்டனை அனுபவித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள்தான், அப்பெண் இருக்கும் இடம் குறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பேரில், பொலிஸார் அப்பெண்ணை கைது செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் பொலிஸார் தகவல் தெரிவிக்கையில்:- 

பாதிக்கப்பட்ட சோனு  2015 ஆம் ஆண்டு ஆர்த்தி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணத்திற்கு பின், சோனு பெயரில் இருந்த நிலம் மற்றும் சொத்துகளை தன் பெயரில் மாற்றித் தருமாறு ஆர்த்தி கோரியுள்ளார். 

அவ்வாறு செய்ய சோனு மறுத்ததால், அவர் காணாமல் போயிருந்தார். இந்நிலையில் மதுரா அருகே கால்வாய் ஒன்றில், பெண்ணின் சடலம் கைப்பற்றப்பட்டது. உடல் கூறாய்வு செய்யப்படாமலேயே, அப்பெண்ணின் சடலம் எரியூட்டப்பட்டது.

6 மாதங்களுக்குப் பின், ஆர்த்தியின் தந்தை பொலிஸ் நிலையம் சென்று தனது மகளைக் காணவில்லை என்று முறைப்பாடு செய்தார். இதையடுத்து, எரியூட்டப்பட்ட பெண்ணின் புகைப்படத்தைக் காட்டியதும், அது தனது மகள் ஆர்த்தி என்று தந்தை அடையாளம் காட்டியுள்ளார். 

இதையடுத்து, ஆர்த்தியின் கணவர் சோனு மீது தந்தை கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சோனு மற்றும் அவரது நண்பரைக் கைது செய்த பொலிஸார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

பிணையில் வெளியே வந்த சோனுவும், அவரது நண்பரும் ஆர்த்தி இருக்கும் இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து பொலிஸ் நிலையத்தில் தெரிவித்ததையடுத்து, ஆர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்.