கணவன், மனைவியை கொலை செய்துவிட்டு வீட்டிலிருந்து நகைகள் கொள்ளை! குற்றவாளிக்கு இரட்டை துாக்குத் தண்டணை விதித்து நீதிபதி மா.இளஞ்செழியன் அதிரடி தீர்ப்பு..

ஆசிரியர் - Editor I
கணவன், மனைவியை கொலை செய்துவிட்டு வீட்டிலிருந்து நகைகள் கொள்ளை! குற்றவாளிக்கு இரட்டை துாக்குத் தண்டணை விதித்து நீதிபதி மா.இளஞ்செழியன் அதிரடி தீர்ப்பு..

வவுனியா - பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கணவன், மனைவியை கொலை செய்துவிட்டு வீட்டிலிருந்த நகைகளை கொள்ளையடித்த குற்றவாளிக்கு இரட்டைத் துாக்குத் தண்டணை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். 

2012ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் திகதி வவுனியா பன்றிக்கெய்த குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்த கந்தையா முத்தையா மற்றும் அவரது மனைவி பரமேஸ்வரி இருவரும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

சம்பவத்தையடுத்து அவர்களது வீட்டில் தோட்ட வேலைகளுக்கு அமர்த்தப்படும் சாஸ்திரி கும்மாங்குளத்தைச் சேர்ந்த சகோதரர்களான சிங்காரு சத்தியசீலன், சிங்காரு சதீஸ்வரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

வவுனியா நீதிவான் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் எதிரிகள் இருவருக்கும் எதிராக கொலை, கொள்ளை குற்றச்சாட்டுக்கள் முன்வைத்து வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் விளக்கம் இடம்பெற்று வந்தது. கொல்லப்பட்டவர்களின் மகள், பொலிஸார், நிபுணத்துவ சாட்சிகள் மற்றும் எதிரிகள் தரப்பு சாட்சிகள் நிறைவடைந்து இன்று தீர்ப்புக்கு நியமிக்கப்பட்டது.

"சாட்சிகளின் அடிப்படையில் முதலாவது எதிரி பரமேஸ்வரி என்பரை உயிர் போகும் படி கூரிய ஆயுதத்தினால் தாக்கியமை மற்றும் அவரது நகைகளை கொள்ளையிட்டமை மற்றும் முத்தையாவை உயிர் போகும் வரை கூரிய ஆயுதத்தினால் தாக்கியமை 

நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் அவரை குற்றவாளியாக உறுதி செய்து முதலாவது குற்றத்துக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் இரண்டாவது குற்றத்துக்கு இரட்டை தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது.

2வது எதிரிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்படாத நிலையில் அவர் விடுவித்து விடுதலை செய்யப்படுகிறார்" என்று மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

தூக்குத் தண்டனை குற்றவாளியை இலங்கை ஜனாதிபதி தீர்மானிக்கும் நாளில், உயிர் பிரியும் வரை தூக்கிலிட்டு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் மேல் நீதிபதி தீர்ப்பளித்தார்.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு