SuperTopAds

எரிவாயு தட்டுப்பாடு மக்களின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் ஏற்படுகின்றது

ஆசிரியர் - Editor III
எரிவாயு தட்டுப்பாடு மக்களின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் ஏற்படுகின்றது

எரிவாயு தட்டுப்பாடு மக்களின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் ஏற்படுவதாக கல்முனை பிராந்திய எரிவாயு முகவர் உயரதிகாரி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் உள்ள பெரியநீலாவணை மருதமுனை மணல்சேனை நற்பிட்டிமுனை பாண்டிருப்பு கல்முனை சாய்ந்தமருது சேனைக்குடியிருப்பு நாவிதன்வெளி சொறிக்கல்முனை சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளில் சடுதியாக லிற்றோ எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் பரவியிருந்தன.

இதனை தொடர்ந்து எரிவாயு களஞ்சியப்படுத்தப்படுகின்ற பிரதான முகவர் நிலைய உயரதிகாரி ஒருவரை தொடர்பு கொண்ட போது மக்களின் பொறுப்பற்ற செயற்பாடே எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட காரணம்.ஏற்கனவே விறகு அடுப்புகளை பாவித்து வந்த மக்கள் தற்போது பெய்து வருகின்ற மழை காரணமாக அவ்வடுப்புகளை கைவிட்டு எரிவாயு அடுப்புகளில் நாட்டம் கொண்டுள்ளனர்.இவ்வாறான நிர்ப்பந்தம் காரணமாகவும் ஒரே நேரத்தில் பொதுமக்களிடம் இருந்து எரிவாயுக்கான கேள்விகளும் அதிகரிப்பதனால் இவ்வாறான தட்டுப்பாடுகள் ஏற்படுகின்றன.

மேலும் எமது   நற்பிட்டிமுனை லிட்ரோ எரிவாயு விநியோக நிலைய மொத்த விற்பனை நிலையத்திற்கு    எடுத்து வரப்பட்ட சுமார் 1000 க்கும் அதிகமான சிலிண்டர்கள்   ஒவ்வொரு நாளும் வாகனங்களில் ஏற்றப்பட்டு விநியோகம்  இடம்பெற்று வருவதாகவும்  செயற்கை தட்டுப்பாடு என்ற செய்தி உண்மைக்கு புறம்பானது என அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் எரிவாயுக்கான விலைக்குறைப்பு தொடர்பான அறிவித்தலை நம்பி இருந்து சுயநலமாக செயற்பட்ட  மக்கள் அதன் பின்னர் திடீரென  எரிவாயுவை கொள்வனவு செய்த செயற்பாடும் தட்டுப்பாடு நிலவ மற்றுமொரு காரணமாகும் என அவர் குறிப்பிட்டார்.

இது தவிர   12.5 கிலோ கிராம்  5.0 மற்றும் 2.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயு  சீராக விநியோகிக்கப்படுகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.