SuperTopAds

படையினருக்கும், விசேட அதிரடிப்படைக்கும் வீடு வழங்குவதையே நோக்காக கொண்டு வீடமைப்பு அதிகாரசபை செயற்பட்டால், அப்படிப்பட்ட வீடமைப்பு அதிகாரசபை தேவையில்லை..

ஆசிரியர் - Editor I
படையினருக்கும், விசேட அதிரடிப்படைக்கும் வீடு வழங்குவதையே நோக்காக கொண்டு வீடமைப்பு அதிகாரசபை செயற்பட்டால், அப்படிப்பட்ட வீடமைப்பு அதிகாரசபை தேவையில்லை..

யாழ்ப்பாணத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் காணி, வீடு இல்லாமல் இருக்கும் நிலையில் படையினருக்கு இங்கே காணிகளும், வீடுகளும் தேவை தானா? என கேள்வி எழுப்பியிருக்கும் வடமாகாணசபை உறுப்பினா் எம்.கே.சிவாஜிலி ங்கம், படையினா் காணி, வீடு கேட்பதை நிறுத்தவேண்டும் எனவும் கூறியுள்ளாா். 

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்கள் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றபோதே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்..

யாழ் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு காணிகளும் வீடுகளும் இல்லை. ஆனால் படையினர் தமக்கு காணிகளை ஒருபுறம் சுவீகரிக்க மறுபுறம் வீட்டுத் திட்டங்களையும் பெறுவதற்கான நடவடிக்கைள் முன்னெடுத்து வருகின்றாா்கள். 

வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான நாவற்குழி காணியில் அரச உத்தியோகத்தர்களுக்கு வீடமைப்புத் திட்டமொன்று கொண்டு வரப்படுகின்றது. அரச ஊழியர்களுக்கும் பொது மக்களுக்கும் அத்தகைய வீடமைப்புக்களை வழங்கலாம். 

ஆனால் படையினருக்கோ அல்லது விசேட அதிரடி படையினருக்கோ அங்கு வீடமைப்பு திட்டங்களை வழங்க முடியாது. அதனை நாங்கள் எதிர்க்கிறோம். இந்த வீடமைப்பு அதிகார சபையானது தொடர்ந்தும் மக்களை ஏமாற்றி மக்கள் விரோத செயற்பாடுகளை முன்னெடுத்தால் வீடமைப்பு அதிகார சபையை தொடர்ந்து இயங்க விட முடியாது.

கொழும்பு சொல்வதையே அவர்கள் தொடர்ச்சியாக செய்து வருகின்றனர். இங்கு தொடர்ந்தும் அவ்வாறு செயற்படுவதை ஏற்க முடியாது என்பதுடன் படையினருக்கு வீடுகள் அமைக்கும் திட்டத்தை நிராகரிப்பதுடன் அதனைத் தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.