யாழ்.வர்த்தக கட்டிட தொகுதி 2018ம் ஆண்டில் கட்டப்படும் சாத்தியம் இல்லை..
யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்ட வர்த்தக கட்டிடத் தொகுதி 2018ம் ஆண்டில் முன்னெடுப்பதற்கான எந்தவிதமான சாத்தியங்களும் காணப்படவில்லை என வடக்குமாகான திறைசேரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2017ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் ஆயிரம் மில்லியன் ரூபாவில் அமைக்கத் திட்டமிடப்பட்ட நவீன வர்த்தக அடுக்குமாடிக் கட்டிடத்திற்கான பணிகள் கடந்த ஆண்டு ஆரம்பிக்க நடவடிக்கைகள் இடம்பெற்றன.
இருப்பினும் ஆண்டு இறுதிவரை குறித்த திட்டத்திற்கான பணம் எவையும் மாகாணத் திறைசேரிக்கு கிடைக்கவில்லை. குறித்த நிதி தொடர்பில் திறைசேரியிடம் வினாவியபோது தெற்கில் ஏற்பட்ட இயற்கை அணர்த்தம் காரணமாக அதிக நிதிச் செலவு ஏற்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த திட்டத்தினை இந்த ஆண்டு ஆரம்பிக்க எண்ணியபோதும் நிதி நடவடிக்கையின் பிரகாரம் குறித்த திட்டத்திற்கான நிதி 2018ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
எனவே குறித்த திட்டத்தினை 2019ம் ஆண்டின் ஆரம்ப காலப் பகுதியில் ஆரம்பிக்கும் வகையில் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது.
இதற்கான முன்னேற்பாடாக 2019ம் ஆண்டின் வரவு செலவுத் திட்டம் தயார் செய்யும்போது குறித்த திட்டத்திற்கான நிதியினையும் பெயர் குறித்து ஒதுக்குமாறு திறைசேரிக்கு எழுத்துமூலம் கோரிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனத் தெரிவித்தனர்.
இதேநேரம் குறித்த கட்டிடத் தொகுதியானது முன்னர் செம்மணியிலும் பின்னர் சங்கிலியன் பூங்கா பிரதேசத்திலும் அமைக்க இரு இடங்களும் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டபோதும் தற்போது யாழ். நகரில் காங்கேசன்துறை வீதி
மற்றும் வைத்தியசாலை வீதி என்பன சந்திக்கும் சத்திரத்துச் சந்தியில் உள்ள சந்தைப் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.