போதைப் பொருள் பயன்பாட்டை சட்டரீதியாக கட்டுப்படுத்தவேண்டியவர்களே உடந்தையாக உள்ளனர்! உயர்மட்ட நடவடிக்கையே தேவை - எம்.ஏ.சுமந்திரன்..
போதைப் பொருள் பாவனையை சட்டரீதியாக கட்டுப்படுத்தவேண்டியவர்கள் அதற்கு உடந்தையாக இருக்கும் நிலையில் அது தொடர்பாக உயர்மட்டத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும். என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.
அதிகரித்து வரும் போதைபொருள் பாவனை தொடர்பில் கருத்துரைக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், போதைப் பொருள் பாவனை தற்போது தலைவிரித்தாடுகின்றது.
இதன் காரணமாக 10 இளைஞர்களுக்கு மேல் உயிரிழந்துள்ளார்கள். 140 பேர் வரையிலானோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த காலத்தில் வன்முறை ஒழிப்போம் போதை பொருளை தடுப்போம் எனும் தொனிப்பொருளில் நாம் ஒரு வேலை திட்டத்தை ஆரம்பித்திருந்தோம்.
கொரோனாப் பெருந்தொற்று காரணமாக அதனை தொடர்ச்சியாக செய்ய முடியாமல் போய்விட்டது. ஆனாலும் தற்போது போதைப்பொருள் பாவனை என்பது தலைக்கு மேலே சென்று விட்டது.
இதன் காரணமாக மீண்டும் அந்த வேலை திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதுடன் மூன்று விதமாக மேற்கொள்ளவுள்ளோம்.
முதலாவது - இளையவர்களுக்கு புத்திமதி வழங்கும் ஒரு விழிப்புணர்வு நிகழ்வினை பாடசாலை மட்டத்தில் நடாத்தல்,
இரண்டாவது - போதைப்பொருள் பாவனையில் சிக்கி உள்ளவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவது தொடர்பான விடயங்களை மேற்கொள்ளல்,
மூன்றாவது - போதைப்பொருள் பாவனையை தடுக்கவேண்டும். இதனை சட்டரீதியாக தடுக்க வேண்டியவர்களே அதற்கு உடந்தையாக இருப்பது தெரிகிறது.
அது சம்பந்தமாக மிக உயர்ந்த மட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.