கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் மகஜர் ஒன்றை பிரதமரிடம் கையளித்தார் எம்.பி.சிறீதரன்.

கிளிநொச்சி மாவட்டம் போரினால் பாதிக்கப்பட்டு மிக நலிவடைந்திருக்கும் நிலையில் மாவட்டத்தின் அபிவிருத்தி மேம்பாட்டுக்காக சில திட்டங்களை நடைமுறைப்படுத்தும்படி தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்று கிளிநொச்சியில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் நேரடியாக கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
அந்த கோரிக்கைகளாவன,
01. கிளிநொச்சி மாவட்டத்தின் நகர வடிவமைப்பை மேற்கொள்வதற்குத் தடையாக கீழ்வரும் காணிகள் இராணுவத்தின் வசமுள்ளது.
ஐ. கரைச்சி பிரதேச சபைக்குச் சொந்தமான பொது விளையாட்டு மைதானம், பொதுநூலகம், கலாசார மண்டபம் என்பவற்றை உள்ளடக்கியதும், கிளிநொச்சி நகர வடிவமைப்புக்கு முதன்மையானதாகவுமுள்ள காணியை இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ளதால் பொதுப் பயன்பாட்டுத் தேவைகளை பூர்த்திசெய்து நகர அபிவிருத்தியை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுகிறது.
கிளிநொச்சி மாவட்டத்தில் 2700 இற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்ற நகர்;ப்புற பெரிய பாடசாலையான கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்குச் சொந்தமான 02 ஏக்கர் காணியில் 112பேர்ச் காணி மட்டுமே இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.
மிகுதிக் காணியை மிகவிரைவாக விடுவிப்பதாக கூறப்பட்டபோதும் அக்காணி விடுவிக்கப்படவில்லை. இதனால் அப்பாடசாலை ஆரம்பப்பிரிவை தனிமைப்படுத்தி கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பாரிய இடர்பாடுகளை சந்தித்து வருகிறது.
கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் விளையாட்டு மைதானக்காணி விடுவிக்கப்பட்டு பாடசாலைக்கு கையளிக்கப்பட்ட பின்னரும் அதற்கான பாதையை மாணவர்கள் பயன்படுத்தவும், மைதானத்திற்குள் செல்வதற்கும் இராணுவத்தினர் தடைவிதித்துள்ளனர்.
இது இம்மாவட்டத்தில் பாரிய தொகை மாணவர்களைக் கொண்ட நகர்ப்புற பிரதான பாடசாலைக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பின்னடைவாகும்.
கிளிநொச்சி மாவட்டத்திற்கே உரித்தான சமூகப் பண்பாட்டு மரபியல்களோடு இணைந்து தமிழர்களின் கலை, கலாசாரங்களை வளர்க்கின்ற கவின்கiலைக் கல்லூரியின் காணி தற்போதும் இராணுவத்தினர் வசமுள்ளது.
இக்காணியை உடனடியாக விடுவிப்பதன் மூலம் கலை, பண்பாட்டு வடிவங்களை இந்த மண்ணிலே கட்டியெழுப்புவதுடன் எதிர்கால சந்ததியினருக்கும் இது ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
கிளிநொச்சி டிப்போச்சந்தியில் உள்ள நீர்த்தாங்கிக்கும் சந்திரன் பூங்காவிற்கும் இடைப்பட்ட 04 ஏக்கர் காணி கிளிநொச்சி மாவட்ட வர்த்தக மையக்கட்டடம், காலாசார மண்டபம் என்பவற்றை அமைப்பதற்கென ஒதுக்கப்பட்ட போதும் இன்றுவரை இராணுவத்தினரால் அக்காணி விடுவிக்கப்பட வில்லை.
கிளிநொச்சி மாவட்ட அரச செயலகத்திற்கு சொந்தமானதும், இராணுவத்தால் அபகரிக்கப் பட்டுள்ளதுமான 02ஏக்கருக்கு மேற்பட்ட காணியை விடுவித்து கிளிநொச்சி மாவட்டத்தின் நகரசபைக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு அக்காணி வழங்கப்பட வேண்டும்.
கிளிநொச்சி நகரத்தின் இலங்கை வங்கி, மக்கள் வங்கிகளுக்கு பின்புறமாக அமைந்துள்ள இராணுவ சுற்றுலா விடுதிகளையும், இராணுவ மையப்பிரதேசங்களையும் நீக்கி அக்காணிகள் மாவட்டத்தின் நகர வடிவமைப்பிற்காக அரச அதிபரிடம் கையளிக்கப்பட வேண்டும்.
155ஆம் கட்டைப் பகுதியில் இளைஞர்சேவைகள் மன்றத்திற்கு உரித்தானதும் தற்போது இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ளதுமான காணியை கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரிடம் ஒப்படைப்பதன் மூலம் இம்மாவட்டத்திற்கான இளைஞர் திறன்விருத்திச் செயற்பாடுகளையும், இளைஞர்களுக்கான வழிகாட்டல்களையும் மேற்கொள்ள முடியும்.
விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் தனது முதுகெலும்பாக கொண்டிருக்கும் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நான்கு பிரதேச செயலாளர்கள் பிரிவுகளிலும்; 38000 மாடுகளும், 1000 எருமை மாடுகளும், 9000 ஆடுகளும் காணப்படுகின்ற போதும் கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றுவரை மேய்ச்சல் தரைக்கென காணி இல்லை.
இதனால் அரச உத்தியோகங்களில் இல்லாத விவசாயத்தையும், கால்நடைப் பொருளாதாரத்தையும் தமது அடிப்படை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் 40மூ இற்கும் அதிகமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கான மேய்ச்சல் தரைக்கென ஒதுக்கப்பட்ட இடங்கள் 2013 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவளத்துறையினரால் அடாத்தாக அளவீடு செய்யப்பட்டுள்ளது.
எமது மாவட்டத்தில் இன்றளவும் 4000 காணியற்ற குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கு சொந்தக் காணிகள் இல்லாத காரணத்தால் வீட்டுத்திட்டமோ, வாழ்வாதார உதவிகளோ வழங்கப்படுவதில்லை.
இக்குடும்பங்களை இந்த மண்ணிலே குடியேற்ற உகந்த காணிகள் இருந்தும் வனவளப்பிரிவினரின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளால் இம்மக்களை குடியேற்றி வாழ்விக்க முடியாத துர்ப்பாக்கிய நிலைமை காணப்படுகின்றது.
25 ஏக்கர் காணி வீதம் பத்து இடங்களில் வீடமைப்பு அதிகார சபைக்கு காணிகளை வழங்குவதன் மூலம் வீட்டுத்திட்டக் குடியிருப்புக்களை உருவாக்க முடியும். இதன்மூலம் ஒரு குடும்பத்துக்கு 1ஃ4 ஏக்கர் காணி வீதம் 2500 குடும்பங்கள் உடனடி நன்மையை பெறக்கூடியதாக இருக்கும்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளில் காணியற்ற நிலையிலுள்ள 4000 குடும்பங்களை உடனடியாக குடியேற்றுவதற்கான அனுமதியை தாங்கள் இச்சபையினூடாக வழங்க வேண்டும்.
இளைஞர்களை வலுவூட்டுகின்ற பல விளையாட்டுக்கழகங்களும், அவற்றின் மைதானங்களும் கடந்த காலங்களில் கிராமங்களின் ஓரங்களிலேயே அமைக்கப்பட்டிருந்தன.
தற்போது அந்த விளையாட்டு மைதானங்களையே வனவளப்பிரிவினர் காடுகளாக அடையாளப்படுத்தியுள்ளனர். உதாரணமாக வட்டக்கச்சி இளந்தளிர் விளையாட்டுக் கழக மைதானம், அக்கராயன் கிழக்கு விநாயகர் விளையாட்டுக்கழக மைதானம், புதுமுறிப்பு சவாரி விடந்தை என்பவற்றைக் குறிப்பிட முடியும்.
இதனால் இந்த மாவட்டத்தின் இளைஞர்கள் உடல், உள ஆரோக்கிய செயற்பாடுகளில் ஈடுபட முடியாதவாறு தடுக்கப்பட்டுள்ளனர்.
02. கிளிநொச்சி மாவட்டத்தின் வலயக்கல்வி அலுவலகம் சொந்தமாக இயங்குவதற்கான கட்டடங்கள் இல்லை. மாவட்டத்தில் 04 கோட்டங்களையும் 104 இயங்குநிலைப் பாடசாலைகளையும், 08 இயங்கா நிலைப் பாடசாலைகளையும், 2117 ஆசிரியர்களையும், 32762 மாணவர்களையும் கொண்ட மாவட்டத்தின் தனிவலயமான கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்திற்கு அதன் கல்விச் சேவையை வளர்த்துக்கொள்ளக்கூடியதான வளங்கள் இன்மை பாரிய குறைபாடாகும்.
A-09 வீதியில் அமைந்துள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு சொந்தமான கட்டடத் தொகுதியை வலயக்கல்வி அலுவலகத்துக்கென வழங்குவதன் மூலம் அதன் கல்வி, நிர்வாக, முகாமைத்துவ செயற்பாடுகளை வளர்ச்சி பொருந்தியதாக மாற்றியமைக்க முடியும்.
03. கடும்பாதிப்புக்கு உட்பட்டோருக்கான (உயிரிழப்பு) கொடுப்பனவாக 100இ000.00 ரூபாவே வழங்கப்படுகின்றது. இக்கொடுப்பனவுத் தொகையில் கடந்த 10 வருடங்களாக மாற்றங்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை. இது போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் தொடர் பின்னடைவுகளையே ஏற்படுத்தியுள்ளது.
04. எமது மாவட்டத்தில் இதுவரை 24796 வீடுகள் வழங்கப்பட்டுள்ள போதும், இன்னும் 17239 புதிய வீடுகளும், 1392 திருத்தியமைக்க வேண்டிய வீடுகளும் தேவையாக உள்ளது.
05. கிளிநொச்சி மாவட்டத்தில் 12000இற்கு மேற்பட்டோர் மாதாந்த சமுர்த்திக் கொடுப்பனவைப் பெறுவதற்கு தகுதியுடையவர்களாக உள்ளபோதும் தற்போது 7000பேருக்கே இக்கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றமையானது ஏற்கனவே போரின் பாதிப்புக்களுக்கு உள்ளாகி வாழ்வாதார வழிகள் இன்றி தமது அன்றாட வாழ்க்கைத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கே அல்லல்படுகின்ற மக்களின் வாழ்க்கையை மேலும் பாதிப்பதாக அமைந்துள்ளது.
06. இம்மாவட்டத்தில் இன்னமும் 11 சமுர்த்தி முகாமையாளர்களுக்கும், 61 சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கும், 04 அலுவலக உதவியாளர்களுக்குமான பதவிகள் வெற்றிடங்களாகவே உள்ளன. இந்த மாவட்டத்தில் நிலவும் இவ் ஆளணிப் பற்றாக்குறையும் சமுர்த்தித் திட்டத்தின் செயற்பாடுகள் பின்னடைவை சந்திப்பதற்கு ஒரு காரணமாகும்.
இந்த மாவட்டத்திலுள்ள ஏராளமான படித்த இளைஞர், யுவதிகளின் நலன்கருதி வெற்றிடமாகவுள்ள பதவிகளுக்கான நியமனங்களை இந்த மாவட்டத்தின் இளைஞர், யுவதிகளுக்கே வழங்குவதற்கு தாங்கள் விசேட செயற்றிட்டம் ஒன்றை வகுக்க வேண்டும் என்று மிக விநயமாகக் கேட்டுக்கொள்கின்றேன்.
07. ஆனையிறவு உப்பளத்தின் நிர்வாக நடவடிக்கைகள் வடக்கு மாகாணத்தினுள் கொண்டு வரப்பட வேண்டும். உலகப்பிரசித்தி பெற்ற ஆனையிறவு உப்பு தற்போது “மாந்தை உப்பு” என பெயர் மாற்றப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான
இளைஞர், யுவதிகள் வேலையற்றவர்களாக உள்ளபோதும் ஆகக்குறைந்தது 500பேருக்காவது வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய இவ் உப்பளத்தில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லீம் இளைஞர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அதேவேளை குறிஞ்சாத்தீவு உப்பளமும் இயங்கமுடியாத நிலையில் காணப்படுகின்றது.
இவ் உப்பளத்திற்கென குறைந்தது 400ஆn ரூபாவை ஒதுக்கீடு செய்கின்ற போது ஆகக்குறைந்தது 500 பேருக்காவது வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடியும். எனவே ஆனையிறவு, குறிஞ்சாத்தீவு ஆகிய இவ்விரு உப்பளங்களையும் வடக்கு மாகாணசபையிடம் ஒப்படைத்து செயற்படுத்துவதற்கு ஒரு துரிதமான திட்டத்தை வகுப்பதன்மூலம் பெருமளவிலான இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்க முடியும்.
08. மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், இலங்கை மின்சார சபை, நில அளவைத் திணைக்களம், மீன்பிடித் திணைக்களம், தபாலகங்கள், வங்கிகள், போன்ற பெரும்பாலான அரச திணைக்களங்களில் புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள மின்மானி வாசிப்பாளர்கள், சாரதிகள், அலுவலக உதவியாளர்கள் போன்றோர்
தென்பகுதியைச் சேர்ந்த சிங்களமொழி பேசும் இளைஞர்களாகவே உள்ளனர். இதனால் இம்மாவட்டத்தில் வேலைவாய்ப்புக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் படித்த இளைஞர், யுவதிகள் உளரீதியான பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
முழுமையான யுத்தத்தின் வடுக்களைச் சந்தித்த இவர்களின் உடல், உளரீதியான நெருக்கீடுகளையும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டிய தேவைப்பாட்டையும் கருத்திற்கொண்டு அவர்களுக்கான வேலைவாய்ப்பினை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
09. வட்டக்கச்சி அரசினர் விவசாயப்பண்ணை, விவசாயப் பாடசாலை என்பன 1954களில் இருந்து 1990கள் வரை குண்டகசாலை விவசாயப் பாடசாலைக்கும், திருநெல்வேலி விவசாயப்பாடசாலைக்கும் நிகரான வகையில் இயங்கிவந்தன. 1990கள் வரை 600இற்கும் மேற்பட்டவர்கள் இப்பண்ணையிலே தொழிலாளர்களாக பணிபுரிந்து தற்போது ஓய்வூதியமும்
பெறுகின்றனர். இந்நிலையில் 295 ஏக்கர் காணிப்பரப்பளவைக் கொண்ட இப்பண்ணை இன்றுவரை இராணுவத்தளமாக வைத்திருக்கப்படுவது இந்த மாவட்டத்தின் உற்பத்தியை மட்டுமன்றி பல மக்களுடைய தொழில் வாய்ப்பையும் சிதைத்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் தொழில் வாய்ப்பைத் தேடுவோரின் வாழ்க்கைக்கும், விவசாய உற்பத்திகளின் அதிகரிப்புக்கும்,
புதிய விவசாய முறைகளை புகுத்துவதற்கும் அரச நிறுவனமான இவ்விவசாயப்பண்ணையை முழுமையாக விடுவிப்பதன் மூலமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். எனவே இப்பண்ணையை உடனடியாக இராணுவத்தினரிடமிருந்து விடுவித்து வடக்கு மாகாண சபையிடம் ஒப்படைத்து செற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
10. முழங்காவில் மரமுந்திரிகைத் தோட்டம் 1100 ஏக்கர், முழங்காவில் கடற்படை முகாம் 800 ஏக்கர், வட்டக்கச்சி அரசினர் விவசாயப்பண்ணை-விவசாய பாடசாலை 295 ஏக்கர், முக்கொம்பன் தென்னந்தோட்டம் 180 ஏக்கர், சாந்தபுரம் பண்ணை 680 ஏக்கர், ஜெயபுரம் பண்ணை 120 ஏக்கர், மலையாளபுரம்; பண்ணை 78 ஏக்கர் என்பவை இராணுவத்தின் சிவில் பாதுகாப்புப் பிரிவினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
11. முழங்காவில் பகுதி மக்களின் இரத்தத்தாலும், வியர்வையாலும் உருவாக்கப்பட்ட 1100 ஏக்கர் மரமுந்திரிகைத் தோட்டத்தை முழங்காவில் விவசாயிகள் கூட்டுறவுச்சங்கத்தினரிடம் ஒப்படைக்கும் பட்சத்தில் 200 குடும்பங்களுக்கான வேலைவாய்ப்பையும், வாழ்வாதார வழிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கமுடியும்.
முழங்காவில் கடற்படைமுகாமுக்கென கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள 800ஏக்கர் காணிகளில் சுமார் 120ஏக்கர் காணிகள் பருவகாலத்திற்கேற்ப விளையும் புளியமரத்தோட்டங்களைக் கொண்டவை. 1990, 2000ஆம் ஆண்டுகளில் அப்பகுதி மக்களால் உருவாக்கப்பட்ட இப்பயன்தரு புளியமரப்பண்ணைகளை முழங்காவில் விவசாயிகள் கூட்டுறவுச் சங்கத்தினரிடம் ஒப்படைத்தால் 100இற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பையும்,
வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்திக் கொடுக்க முடியும். இவைதவிர முக்கொம்பன் தென்னந்தோட்டம், சாந்தபுரம் பண்ணை, ஜெயபுரம் பண்ணை, மலையாளபுரம் பண்ணை, வட்டக்கச்சி அரசினர் விவசாயப்பண்ணை என்பவற்றை வடக்கு மாகாண விவசாய அமைச்சிடம் ஒப்படைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியும்.
12. தங்களோடு நாங்கள் ஏற்கனவே பேசியதற்கிணங்க கிளிநொச்சி சேவைச்சந்தை புனரமைப்புக்கென மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, புனரமைப்பு, வடக்கு அபிவிருத்தி, மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சினால் 790ஆnரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆனால் இன்றுவரை அந்த நிதி அமைச்சரவையினால் விடுவிக்கப்படவில்லை. இதனால் கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே முப்பது ஆண்டுகால யுத்தத்தால் தமது பொருளாதார வல்லமைமையை இழந்த இவ்வர்த்தகர்கள் தற்காலிக கொட்டகைகளிலேயே வியாபார நிலையங்களை
நடாத்தி வருகிறார்கள். சென்ற ஆண்டு அவைகூட தீப்பற்றி எரிந்த நிலையில் மீள்குடியேற்ற அமைச்சின் உதவியால் அவர்கள் மெல்ல மெல்ல மேலெழுந்து வரும் இன்றைய சூழலில் இச்சந்தையின் கட்டுமானம் அத்தியாவசியமானது. எனவே ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்நிதியை விடுவிப்பதற்கு அமைச்சரவை அனுமதியை பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
13. கிளிநொச்சி மாவட்டத்தின் கூட்டுறவுச் சங்கங்களை மீளக்கட்டி எழுப்புவதற்கும் அவற்றின் வினைத்திறனான செயற்பாட்டை விருத்தி செய்யவும் இம்மாவட்டத்தில் அமைக்கப்பட வேண்டிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை இக்கூட்டுறவு சங்கங்களுக்கூடாக அமைப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பதன் மூலமும்,
எமது மாவட்டத்தின் கூட்டுறவு சங்கங்களுக்கான வட்டியில்லாக் கடன்களை வழங்குவதன் மூலமும் பலநூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கமுடியும். குறிப்பாக கரைச்சி கிழக்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு வட்டக்கச்சி-இராமநாதபுரம் மத்தியிலான எரிபொருள் நிரப்பு நிலையமும், கரைச்சி வடக்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு புளியம்பொக்கணைச் சந்தியிலான எரிபொருள் நிரப்பு நிலையமும்,
கரைச்சி தெற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு உருத்திரபுரம்-கூழாவடிப் பகுதியிலான எரிபொருள் நிரப்பு நிலையமும், அக்கராயன் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு அரைக்கும் ஆலைக்கான இயந்திரங்கள் வழங்குவதற்கும் குறைந்தது 100ஆn ரூபாவை ஒதுக்கீடு செய்வதன் மூலம் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தில் பெருமளவிலான மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.
14. கிளிநொச்சி மாவட்டத்தினுடைய புகையிரதப்பாதைகளில் திருமுறிகண்டி தொடக்கம் எழுதுமட்டுவாள் வரையுமான முல்லைத்தீவு, யாழ்ப்பாண எல்லைகளைக் கொண்ட கிளிநொச்சி மாவட்ட பகுதியில் 1968ஆம் ஆண்டுக்கு முற்பட்ட புகையிரதநிலைய வரைபடத்தின் அடிப்படையில் புகையிரதக்கடவைகள் அமைக்கப்படடுள்ளன.
ஆனால் 1968ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள், மக்களது பெருக்கம், போக்குவரத்துப் பாதைகளின் அதிகரிப்பு என்பவை இன்னும் கருத்தில் எடுக்கப்படாமையால் மேலதிகமாக 21 இடங்களில் புகையிரதக்கடவைகள் அமைக்கப்பட வேண்டிய தேவை அவசியமானதாக உள்ளது.
2013ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைப் பயணங்களால் 51பேர் கிளிநொச்சி மாவட்ட புகையிரதப்பாதைகளில் விபத்துக்குள்ளாகி மரணித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பில் புகையிரதத் திணைக்களத்திற்கு பலதடவைகள் தெரியப்படுத்தியும் பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
15. கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள நீர்ப்பாசனக் குளங்களான கரியாலைநாகபடுவான் குளம், சின்னப்பல்லவராயன்கட்டுக்குளம், அக்கராயன்குளம், ஆனைவிழுந்தான்குளம், மாயவனூர் புழுதியாற்றுக் குளம், மலையாளபுரம் ஐயன்குளம் ஆகிய குளங்களின் விரைவான புனரமைப்பு விவசாயத்தை ஆதாரமாகக் கொண்டியங்கும் கிளிநொச்சி மாவட்டத்தின் மிக முக்கிய தேவைப்பாடுகளுள் ஒன்றாகும்.
16. 1990களுக்கு முன்னர் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையில் 500இற்கு மேற்பட்டோர் வேலைசெய்து வந்தனர். இன்று அத்தொழிற்சாலை மூடப்பட்டு இராணுவ முகாமாக காணப்படுகின்றது.
இத் தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதன் மூலமும் அவ்விடத்தில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான வர்த்தக மையம் மற்றும் தொழிற்பேட்டையை உருவாக்குவதன் மூலமும் 500இற்கு மேற்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்க முடியும்.
17. கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது 95 கிராம அலுவர் பிரிவுகளே உள்ளன. 600 இற்கு மேற்பட்ட குடும்பங்களைக் கொண்ட கிராம அலுவலர் பிரிவுகளில் புதிய பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டியது அவசியமானதாகும்.
18. கிளிநொச்சி மாவட்டத்தில் தபால்சேவையை சீர்செய்யும் வகையில் புதிய தபாலகங்களை உருவாக்க வேண்டும். 1960களுக்கு முற்பட்டகாலங்களில் ஆரம்பிக்கப்பட்ட தபாலகங்களே தற்போது இயங்குநிலையிலுள்ளன. அதிலும் முகமாலை, பல்லவராயன்கட்டு தபால்நிலையங்கள் இன்னும் இயங்குநிலைக்கு கொண்டுவரப்படவில்லை.
இத்தபாலகங்களை உடனடியாக இயங்குநிலைக்கு கொண்டுவர ஆவன செய்வதோடு பாரதிபுரம், ஜெயபுரம், புன்னைநீராவி, பள்ளிக்குடா, செல்வாநகர், புதுமுறிப்பு மாயவனூர் பகுதிகளில் புதிய தபாலகங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
19. கிளிநொச்சி மாவட்டத்தின் வடகிழக்குக் கரையோரமாக இருக்கின்ற கல்லாறு, பூனைத்தொடுவாய், பேய்ப்பாரப்பிட்டி கடற்பகுதிகள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களுக்குச் சொந்தமான கடல் இறைப்பகுதிகளைக் கொண்டுள்ளன. ஆனால் இங்கு தொழில் செய்கின்ற கடற்றொழிலாளர்கள் அனைவரும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.
எனவே கிளிநொச்சி மாவட்ட மீன்பிடித் தொழிலாளர்களின் நன்மைகருதி யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களுக்குச் சொந்தமாகவுள்ள இக்கடற்பகுதிகளை இலங்கை வரைபடத்தினூடாக கிளிநொச்சி மாவட்டத்திற்கு விடுவிக்க வேண்டும்.
20. சிவில் பாதுகாப்புப் பிரிவின் கீழ் நடாத்தப்படுகின்ற கிளிநொச்சி மாவட்ட முன்பள்ளிகளை அந்த இராணுவ வலையமைப்பிலிருந்து விடுவித்து வடக்குமாகாண முன்பள்ளி செயற்பாட்டுத் திட்டத்திற்குள் அதே சம்பள அளவுத்திட்டத்தோடு உள்வாங்க வேண்டும். இதற்கான உடனடி நடவடிக்கையை தாங்கள் மேற்கொள்வீர்கள் என நம்புகிறேன்.
எனவே மேற்குறித்த விடயங்களின் தீவிரத்தன்மையையும், இதனால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களையும் கருதி, யுத்தத்தின் போதும், அதன் பின்னரும் பல்வேறு வகையான பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள கிளிநொச்சி மாவட்ட மக்களின் வளமான வாழ்வையும்,
எமது மாவட்டத்தின் அபிவிருத்தியையும் கருத்திற்கொண்டு இவ்விடயங்களில் அதிக அக்கறை காட்டி உடனடித்தீர்வைப் பெற்றுத்தர ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.