தமிழில் அந்தோனியார் வீதி - ஆங்கிலத்தில் பிள்ளையார் வீதி..! மத குழப்பதை உருவாக்கும் முயற்சியா என மக்கள் விசனம்..
தமிழில் அந்தோனியார் வீதி எனவும், ஆங்கிலத்தில் காட்டுப் பிள்ளையார் வீதி எனவும் ஒரு வீதிக்கு இரு பெயர்களில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நாட்டப்பட்ட ஒப்பந்த அறிவிப்பு விளம்பரப் பலகையில் தமிழில் பெயரைச் சரியாகவும் ஆங்கிலத்தில் தவறாகவும் எழுதி விளம்பரப்படுத்தப்பட்டுள்ளமை திட்டமிட்ட குழப்பத்தினை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டதா? என்று மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதிப் பங்களிப்பில் 3.21 கிலோமீற்றர் தூரமான குறித்த வீதி கடந்த ஆண்டு இறுதியில் நிறைவுறுத்தப்பட்டிருந்தது. தென்னிலங்கையினைச் சேர்ந்த நிறுவனத்தினால் வீதி புனரமைக்கப்பட்டிருந்தது. மந்துவில் சந்தி ஊடாகச் செல்லும் குறித்த வீதி நந்திக்கடல் ஓரத்தில் மிக நீண்டகாலமாகக் காணப்படுகின்ற அந்தோனியார் தேவாலயப் பகுதியைச் சென்றடைகிறது.
அதனால் அந்தோனியார் கோவில் வீதி என்றும் தேவாலயம் காணப்படும் பகுதி காட்டுப்பகுதி என்பதால் காட்டு அந்தோனியார் கோவில் வீதி என்றும் அழைக்கப்பட்டுவந்த நிலையில் அரச திணைக்களினால் காட்டு அந்தோனியார் வீதி என்று பெயரிடப்பட்டுவந்துள்ளது.
இந்நிலையில் வீதி ஒப்பந்த விளக்க விளம்பரப்பலகையில் தமிழில் காட்டு அந்தோனியார் கோவில் வீதி என்றும் ஆங்கிலம் மற்றும் சிங்களத்தில் காட்டு அதிசயப் பிள்ளையார் வீதி என்றும் அச்சிடப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே அந்த வீதிக்கு அண்மையில் பிரதான வீதியில்
மந்துவில் பிள்ளையார் கோவில் காண்படுவதால் இரண்டு சமய மக்களும் செறிந்துவாழும் குறித்த பகுதியில் சிக்கலை ஏற்படுத்தும் உள்நோக்கம் கொண்ட செயற்பாடா? இது என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.