முன்மாதிரிகளான முன்னாள் போராளிகளின் மாட்டுப் பண்ணை: அமெரிக்கா கௌரவம்

கிராமியப் பொருளாதாரத்தை வலுவூட்டும் வகையில் சந்தையை இலக்காக கொண்ட பால் உற்பத்தி திட்டம் (Market-Oriented Dairy Project) அமெரிக்க அரசின் 14.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியில் தொடங்கப்படுகிறது. அதன் ஆரம்ப நிகழ்வு கடந்த 17.05.2018 வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர், இலங்கை பிரதமர் உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
அமெரிக்க நிதியுதவியுடன் இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கால்நடை வளர்ப்பாளர்களின் உள்ளூர் பால் உற்பத்தி அளவை இரண்டு மடங்காக்கும் நோக்கில் அமெரிக்க அரசின் விவசாய நிறுவனம் (United States Department of Agriculture – USDA) இத்திட்டத்துக்கு நிதியுதவி அளிக்கின்றது. இத்திட்டத்தின் மூலம் இலங்கையில் 15000 க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் நடுத்தர பண்ணையாளர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்டகாலத்தில் 400 வீதமாக பால் உற்பத்தியை அதிகரிக்க இலங்கை அரசு எண்ணியுள்ளது.
இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிறிய மற்றும் நடுத்தர பண்ணையாளர்களுக்கு போதிய வசதிகளை வழங்கி, புதிய தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்துவதனூடாக பண்ணையாளர்களின் வருமானம் இரண்டு மடங்காக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
பால் உற்பத்தியாளர்களுக்கு பயிற்சிகளை வழங்கி செயற்றிறனை மேலும் அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
பயிற்சிகளை வழங்கிய நேசன்- வசந்தி தம்பதியருக்கு அமெரிக்க அரசு கவுரவம்
முன்னாள் போராளிகளான நேசனும் அவரது மனைவி வசந்தியும் இணைந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் புத்துக்குடியிருப்பு பிரதேசத்தில் 10 மேற்பட்ட பால் மாடுகளுடன் பண்ணையை வெற்றிகரமாக நடாத்தி வருகின்றனர். இவர்களது பண்ணை ஒரு சமூகப் பண்ணையாகும். தன்னலம் கருதாது சமூக சேவைகளையும் திறம்பட செயற்படுத்தி வரும் இவர்கள் தாயகத்தில் சிறந்த முன்மாதிரியாவார்கள்.
இவரது சமூக சேவைகளை கண்டு வியந்த அமெரிக்க, இலங்கை அரசுகள், 2800 பேருக்கு இயற்கை விவசாயம், கால்நடை வளர்ப்பு பயிற்சிகளை வழங்கியமை, பண்ணை முயற்சிகள், சிறிய அளவிலிருந்து ஒரு நடுத்தர பண்ணையாளராக வளர்ச்சியடைந்து வருவதனை முன்னிட்டும் கொழும்பில் இடம்பெற்ற மேற்குறித்த சந்தையை இலக்காக கொண்ட பால் உற்பத்தி திட்ட நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். இலங்கையிலிருந்து குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட ஒரேயொரு பண்ணை முயற்சியாளரும் இவராவார். இலங்கைப் பண்ணையாளர்கள் சார்பிலும் நேசன் அவர்கள் அங்கு நன்றியுரையினையும் தெரிவித்துள்ளார்.
“இவர் ஒரு சிறந்த பண்ணையாளர், இயற்கை விவசாயி, இயற்கை விவசாயத்துக்கான மருந்துகள் உற்பத்தியினை மாட்டுப் பண்ணையில் வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறார்” என நேசன் அவர்களை அறிவிப்பாளர் அழைத்ததோடு மட்டுமல்ல, நிகழ்வின் தொடக்கத்தில் மங்கள விளக்கேற்றும் போதும் வேட்டி கட்டிய தமிழனாக பெருமிதமடைந்திருக்கிறார்.
தான் இவ்வளவு நாளும் கஷ்டப்பட்டதற்கு சரியானதொரு அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும், போரால் சிதைந்த எம் தேசத்தில் இன்னும் ஆயிரமாயிரம் பண்ணையாளர்களை உருவாக்க அயராது பாடுபடப் போவதாகவும், பண்ணை முயற்சிகளில் இனிவரும் காலங்களில் இன்னும் திறம்பட செயலாற்ற வேண்டும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகிறார் நேசன்.
2800 பேருக்கு இதுவரை இலவசமாக பயிற்சியளித்தாலும் அவரிடம் இதுவரை பயிற்சியளிக்க என்று பிரத்தியேகமான இடங்கள் எதுவும் இல்லை. மாட்டுப் பண்ணையின் ஓரங்களிலும், மர நிழல்களிலும் தான் இவ்வளவு காலமும் பயிற்சிகளை வழங்கி வந்துள்ளார். பயிற்சிகளை வழங்குவதற்கு இவரது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு இடத்தை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டியது நம் அனைவரதும் கடமையாகும்.