சாம்பியன் பட்டத்தை வென்ற சிந்து!!
இந்திய வீராங்கனை சிந்து சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை தனதாக்கியுள்ளார்.
சிங்கப்பூரில், 'சூப்பர் 500' சர்வதேச பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சிந்து 27, சீனாவின் ஜி யி வாங் 22, மோதினர். முதல் செட்டை 21–9 எனக் கைப்பற்றிய சிந்து, 2 ஆவது செட்டை 11–21 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் எழுச்சி கண்ட இவர், 21–15 என வென்றார்.
மொத்தம் 58 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய சிந்து 21–9, 11–21, 21–15 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதன்முறையாக கோப்பை வென்றார். இது, இந்த சீசனில் (2022) சிந்து கைப்பற்றிய மூன்றாவது பட்டம். ஏற்கனவே இந்த ஆண்டு 'சூப்பர் 300' அந்தஸ்து பெற்ற சையது மோடி சர்வதேச சாம்பியன்ஷிப், சுவிஸ் ஓபனில் கோப்பை வென்றிருந்தார்.
ஐதராபாத்தை சேர்ந்த சிந்து, சிங்கப்பூர் ஓபன் ஒற்றையரில் கோப்பை வென்ற இரண்டாவது இந்திய வீராங்கனை, மூன்றாவது இந்தியரானார். ஏற்கனவே 2010ல் செய்னா நேவல், 2017ல் சாய் பிரனீத், இத்தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தனர்.