முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை குழப்ப சில பௌத்த இனவாதிகள் முயற்சி. சுட்டிகாட்டுகிறார் மாவை

ஆசிரியர் - Editor I
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை குழப்ப சில பௌத்த இனவாதிகள் முயற்சி. சுட்டிகாட்டுகிறார் மாவை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடாத்தவிடாமல் தடுப்பதற்கு பௌத்த மத அமைப்புக்கள் சில முயற்சித்துக் கொண்டிருக்கும் நிலையில், போரில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான அஞ்சலிகளை செலுத்தவும், அவ ர்களுடைய ஆத்ம சாந்திக்கான பிரார்த்தனைகளை செய்யவும் மக்கள் மன உறுதியுடன் ஒன்றுகூடவேண்டும் எ ன நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா கேட்டுள்ளார். 

இந்த விடயம் தொடர்பாக மாவை சேனாதிராசா ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி குறிப்பில் மேலும் கூறப்ப ட்டிருப்பதாவது, 

இன்று 16.05.18 பத்திரிகையில் முற்பக்கச் செய்தியில் “நினைவேந்தலைத் தடுத்து நிறுத்துங்கள்” “பௌத்த அமைப்பு” “முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு பொலிஸார் தடை” என்று செய்திகள் வந்திருக்கின்றன. இச் செய்திகளுக்குக் காரணம் பௌத்த தகவல் கேந்திர நிலையமும் அதன்; சார்பில் அங்;குல கல்லே ஸ்ரீ ஜீனானந்த தேரர் அவர்களும் பொலிஸ் தலைமை நிலையத்தில் செய்துள்ள முறைப்பாடுகளே ஆகும்.

சில பௌத்த அமைப்புக்களினதும், சில பௌத்த தேரர்களினதும் இத்தகைய செயல்களால் ஓரளவுக்கேனும் பேசப்படுகின்ற இன நல்லிணக்கத்துக்கு பங்கத்தை ஏற்படுத்திவிடும் என அஞ்ச வேண்டியுள்ளது.  2009 வரையில் இந்நாட்டில் இடம்பெற்ற இன வன்முறைகளினாலும், போரினாலும் இந் நாட்டில் குறிப்பாக தமிழ்ப் பேசும் மக்கள் வாழுமிடங்களில் இலட்சக்கணக்கான உயிர்கள் பலியிடப்பட்டுள்ளன. 

அவ்வாறு உயிரிழந்தவர்களின் உறவுகளும், மனித நேயமிக்கவர்களும் ஆத்;ம சாந்திக்காக இறைபணியிடங்களில் பிரார்த்தனைகள் மற்றும் நீர் நிலைகளில் ஈமக்கடன்கள் செய்வதும்; மனித குலத்தின் வரலாறும் பாரம்பரியமுமாகும். இதற்கும் மேலாக இழந்த உயிர்களை நினைந்து ஒரு நாளேனும் தேர்ந்த ஓரிடத்தில் கண்ணீர் விட்டு ஆறுதலும் பெறுவது மக்கள் இயல்பாகும். இதனை ஆதரித்து அங்கீகரித்து மனித நேயமிக்கவர்களும் தம் அஞ்சலியைச் செலுத்துவதும் மரபாகும். 

இதுதான் மனித நாகரிகமும், பண்பாடுமாகப் போற்றப்பட்டு வருகின்றது. ஆயுதப் போர்க்காலங்களிலும், போர் ஓய்ந்த பின்னும் போர் காரணமாய் உயிர் நீத்த இடங்களில் அந்தந்த உறவுகள் அஞ்சலி செலுத்த படைத்தரப்பினால் தடைவிதிக்கப்பட்டு வந்திருந்த நிலையில் 2016 “மே” திங்களில்  த.தே.கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்தபொழுது துயிலும் இல்லங்களில் உறவுகள் சென்று அஞ்சலி செலுத்த, பிரார்த்தனை செய்ய அனுமதிக்க வேண்டுமென்று கேட்டபொழுது எமது கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்திருந்தார்.

அதன் பின் துயிலும் இல்லங்களில் உயிர் நீத்தவர்களின் உறவுகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும், மனிதநேயமிக்கவர்களும் ஒன்று கூடி அமைதியான நிலையில் அஞ்சலி செய்து வந்திருக்கிறார்கள். இச் செயல் ஒரு நல்லெண்ணத்தை வளர்த்தது. ஆனால் இப்பொழுது சில பௌத்த அமைப்புக்களும், பொலிசாரும் நீதிமன்றம் சென்று அவ்வாறான நினைவு கூரல் நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்க எடுக்கும் முயற்சிகளை கண்டிக்கிறோம்.

பௌத்த துறவிகளாயினும் இவ்வாறான ஆன்மிக நடவடிக்கைகளை, உயிர் நீத்தவர்களின் ஈமக் கடன்களை, கண்ணீர் விட்டு ஆத்ம சாந்திக்கான கடமைகளைத் தடுப்பது மனிதமனங்களை, நிச்சயமாகப் பங்கப்படுத்தும், மனப்பிளவுகளை ஏற்படுத்தி விடும் என்பதால் ஜனாதிபதியும, அரசும் தலையிட்டு இன மத விரோதச் செயல்களுக்கு இடமளிக்காமல் பௌத்த துறவிகளின் இத்தகைய செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தமிழ் மக்களின் ஆன்மீக நடவடிக்கைகளுக்கு, ஆத்ம சாந்திப் செயற்பாடுகளுக்கு உதவுமாறும் கேட்டுக் கொள்கிறோம். 

நினைவேந்தல் நிகழ்ச்சிகளுக்கு தடைவிதிப்பதற்கு எடுக்கப்படுகின்ற பௌத்த குருவினதும், அவர்களது அமைப்பினதும், பொலிசாரினதும் தன்னிச்சையான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறும் இன்று மாலை 5.30மணியளவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவுடன் தொடர்பு கொண்டு மக்கள் தங்கள் உறவுகளை நினைவு கூரவும் அஞ்சலி செலுத்தவும் அனுமதிக்க வேண்டுமென்றும் கேட்டிருக்கின்றேன். 18ம் திகதி நினைவேந்தல் நிகழ்ச்சியை தடுப்பதானது பாரிய அளவில் எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதால் விரைந்து தங்கள் அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென்றும் வற்புறுத்தியிருக்கின்றேன். 

பிரதமர் தான் அவ்வாறு உடன் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.இவ்விடயம் சம்மந்தமாக ஜனாதிபதியுடனும் பேசுவதற்கு முயற்ச்சிக்கின்றேன். அதே நேரத்தில் எதிர்கட்சி முதல்வர் திரு. சம்பந்தனிடத்திலும் ஜனாதிபதியையும், பிரதமரையும் தொடர்பு கொண்டு பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுள்ளேன். நினைவு ஏந்தல் நிகழ்ச்சிகளில் பங்கு பெற விரும்பும் உறவுகளும், மனித நேயமிக்கவர்களும் தங்கள்  ஆத்ம சாந்திப் பிரார்த்தனையையும், அஞ்சலியையும் ஆன்மீகக் கடமைகளையும் மன உறுதியோடு நடாத்த ஒன்று கூடுமாறும் மீண்டும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு