வைத்தியசாலையில் சடலமாக ஒப்படைக்கப்பட்ட இளைஞர்கள்! பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியானது, பொலிஸார் தகவல்..
உயிரிழந்த நிலையில் சடலமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரு இளைஞர்களினது மரணத்திற்கான காரணம் மிதிமிஞ்சிய போதைப் பொருள் பாவனை மற்றும் மதுபான பாவனையினால் ஏற்பட்ட ஒவ்வாமை என பொலிஸார் தொிவித்திருக்கின்றனர்.
நேற்றுமுன்தினம் திங்கள் கிழமை மர்மமான முறையில் காரில் உயிரிழந்த இரு இளைஞர்களின் சடலம் திடீர் சுகயீனமடைந்ததாக கூறி மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் முன்னரே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.
பிரேதப் பரிசோதனை யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம் பெற்றுள்ளது. இதன்போதே மதுபானம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தியமையினால் ஏற்பட்ட ஒவ்வாமை உயிரிழந்தமைக்கான காரணம் என தெரிய வந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 30 ஆம் திகதி இரவு மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி காரில் நான்கு பேர் பயணித்துக் கொண்டிருந்த போது மன்னார் உயிலங்குளம் பகுதியில் ஒரே நேரத்தில் இருவர் திடீரென சுகவீனமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இருவரும் அதே வாகனத்தில் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் எம்.பிரதீப் (வயது-26) மற்றும் எம்.மசூர் (வயது-35) என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இரு சடலங்கள் மன்னார் வைத்தியசாலையில் இருந்து நேற்று (31) பிரேதப் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேதப் பரிசோதனை இடம்பெற்றுள்ளது.சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன்,
மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.