முள்ளிவாய்க்கால் இழுபறிகள் நீடிப்பு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பாக இன்று முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதும், வடக்கு மாகாண சபையினரும், பல்கலைக்கழக மாணவர்களும் சந்தித்துப் பேசவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் வழமைபோன்று வடக்கு மாகாண சபையை இம்முறையும் நடத்தும் என்றும் கள ஏற்பாடுகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொள்ளவுள்ளனர் என்று கூறப்படுகிறது.
வடக்கு மாகாண சபையினருக்கும், யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தினருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுக்களில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை. இதனடிப்படையில் முள்ளிவாய்க்கால் மண்ணில் இன்று மீண்டும் கலந்துரையாடல் இடம்பெற்றது. அதில் பல்கலைக்கழக டாணவர்கள் பங்குபற்றவில்லை.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கடந்த மூன்று ஆண்டுகளாக வடக்கு மாகாண சபை முன்னெடுத்து வந்த நிலையில், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தாம் அதனை முன்னெடுக்கப் போவதாக அறிவித்திருந்தனர். இதனால் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.இந்த நிலையில், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் நேற்று சந்திப்பு நடைபெற்றது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் தாம் தயாரித்துள்ள நிகழ்சி நிரலை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை ஆரம்பத்திலிருந்து இறுதி வரையில் கூட்டத்தில் வற்புறுத்தியுள்ளனர். வடக்கு மாகாண முதலமைச்சர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாறு செயற்படுவது, தங்களின் நிகழ்சி நிரலில் நாங்கள் செயற்பட வேண்டும் என்பதைப் போல் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாண சபை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக குழு அமைத்துள்ளதுடன், அது ஒரு நிகழ்சி நிரலையும் தயாரித்துள்ளது. அதனடிப்படையிலேயே நினைவேந்தல் இடம்பெறும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் இரண்டு தரப்பினர் இடையேயும் இணக்கப்பாடு எட்டப்படவில்லை.
முள்ளிவாய்க்கால் மண்ணில், வடக்கு மாகாண சபையின் நினைவேந்தல் குழுவின் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் நினைவேந்தலை நடத்துவதற்குரிய பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.