30 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கினார் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன்..

வறுமையோடு பள்ளி செல்லும் 30 மாணவர்களுக்கு ஈருருளிகள் வழங்கும் நிகழ்வொன்று அண்மையில் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் நடைபெற்றுள்ளது.
பாடசாலை மாணவர்களின் இடைவிலகலை நீக்கும் நோக்கோடு தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் சாதிக்கும் சந்ததி செயற்றிட்டத்தின் 22ஆம் கட்டத்தின் இரண்டாம் பகுதியில் தெரிவுசெய்யப்பட்ட 30 மாணவர்களுக்கு உரூபாய் நான்கு இலட்சத்து ஐம்பதாயிரம் பெறுமதியில் ஈருருளிகள் வழங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,
வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனால் மாணவர்களின் பாடசாலை இடைவிலகலை முற்றாக இல்லாமல் செய்யும் நோக்கோடு சாதிக்கும் சந்ததி என்னும் செயற்றிட்டமானது தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.
இந்த செயற்றிட்டத்தில் மாணவர்களை கல்வியில் ஊக்குவிக்கும் முகமாக கற்றல் உபகரணங்கள், ஈருருளி வழங்கல் உள்ளிட்ட பல்வேறு உதவித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
கடந்த 2014ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் புலம்பெயர் உறவுகளின் பங்களிப்போடு தொடங்கிய இச்செயற்றிட்டம்இ இன்று அதன் 22ஆம் கட்டங்களின் பகுதி(02) உடன், 1538 மாணவர்களை உள்ளீர்த்துள்ளது.
இந்தக்கட்டத்தில் வறுமையோடு
தொலைதூரத்தில் இருந்து பாடசாலைக்கு நடந்து வருகின்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனால் 2018ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து உரூபாய் நான்கு இலட்சத்து ஐம்தாயிரம் ஒதுக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் 11.05.2018 ஆம் நாளான இன்று ரவிகரன் அவர்களுடைய மக்கள் தொடர்பகத்தில் ஒழுங்குசெய்யப்பட்ட நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட மாணவர் முப்பதின்மர்க்கு ஈருருளிகள் வழங்கப்பட்டன.
இங்கு மாணவர்கள் நடுவே சிறப்புரையாற்றிய ரவிகரன் ,
எமது வறிய பகுதியை மீட்டெடுக்கும் வழியானது கல்வியிலேயே தங்கியுள்ளது. நாங்கள் கடந்த கால போர்களில் உயிர்கள், பொருண்மியவளங்கள் என பலவற்றினை இழந்திருக்கின்றோம். ஆனால் கல்விச்செல்வம் என்பது என்றும் அழிவடைவதில்லை. எனவே கல்விச் செல்வத்தின் மூலம் எமது மாவட்டத்தினையும், பிரதேசங்களையும் முன்னேற்றுவோம்.
மாணவர்களாகிய நீங்கள் எந்த நிலை வந்தபோதும் கற்றல் செயற்பாட்டிலிருந்து ஒதுங்கிவிடாதீர்கள். நீங்கள் அனைவரும் சிறப்பாக கல்வி கற்று, எதிர்காலத்தில் எமது தேசத்தினையும் எமது மக்களையும் வழிப்படுத்தவேண்டும் என்றார்.