வடமாகாணசபை வினைத்திறனுடன் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டு பொய்! - ஊடகங்களுடன் மல்லுக்கட்டிய சிவிகே, சிவாஜி

ஆசிரியர் - Editor I
வடமாகாணசபை வினைத்திறனுடன் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டு பொய்! - ஊடகங்களுடன் மல்லுக்கட்டிய சிவிகே, சிவாஜி

வடமாகாண சபை இதுவரையான காலப்பகுதியில் 29 நியதிச் சட்டங்களை உருவாக்கியுள்ளது என்று அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 109ஆவது அமர்வு, கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“வடமாகாண சபை எதுவுமே செய்யவில்லை என ஊடகங்கள் விமர்சிக்கின்றன. அண்மையில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றில், வடமாகாணசபையால் ஒரு நியதிச் சட்டம் கூட இயற்ற முடியவில்லை என குறிப்பிட்டு, கட்டுரை எழுதி உள்ளனர். ஆனால், வடமாகாண சபையால், இதுவரையில் 29 நியதிச் சட்டங்களை உருவாக்கியுள்ளோம். அந்நிலையில், பொய்யான தகவல்களை கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர்.

பல தடவைகள், மாகாணசபைக்கு வரும் நிதி திரும்பிப் போகவில்லை என கூறியுள்ள போதிலும், திரும்பத் திரும்ப, வடமாகாண சபைக்கு வரும் நிதி செலவு செய்யப்படாததால் திரும்புகின்றன என எழுதுகிறார்கள். ஊடகங்களில் வெளிவரும் செய்திகளுக்கு, செய்தி ஆசிரியர்களே பொறுப்பானவர்கள். செய்தியாளர்கள் தான் போதிய விளக்கம் இல்லாமல் எழுதிக் கொடுத்தாலும், அதனை செய்தி ஆசிரியர்கள் சரி பார்க்க வேண்டும். ஆனால், செய்தி ஆசிரியர்களும் அதனைச் செய்வதில்லை.

எனவே, மாகாண சபை ஒரு நியதிச் சட்டத்தையும் உருவாக்கவில்லை எனக் கட்டுரை வெளியிட்ட பத்திரிகைக்கு, சபையினால் தெளிவுபடுத்தி, குறித்த பத்திரிகை ஆசிரியருக்குக் கடிதம் அனுப்பவுள்ளோம்” என்றார்.

அதேவேளை, தமிழ், சிங்கள ஊடகங்கள் மாத்திரமின்றி, நாட்டின் ஜனாதிபதி உட்பட பலரும் வடமாகாண சபையைக் குறைகூறுகின்றனர் என, வடமாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 109ஆவது அமர்வு, கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் இன்று நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “வடமாகாண சபை எதுவும் செய்யவில்லை, வினைத்திறன் இல்லை, வந்த பணத்தைச் செலவழிக்காமல் திருப்பி அனுப்புகின்றார்கள் என, விதவிதமான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார்கள். அதன் மூலம் வடமாகாண மக்கள் மத்தியில் அந்த கருத்துகளை, மிகவும் ஆழமாகப் பதித்துவிட்டார்கள். அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? .

வடமாகாண ஆளுநரின் அலுவலகத்தின் பின் கதவு எங்கே இருக்கின்றது என எனக்குத் தெரியாது. அரசியல் கைதிகள் தொடர்பில் வடமாகாண ஆளுநரைச் சந்தித்துக் கதைத்து இருந்தேன். மறுநாள் பத்திரிகை ஒன்றில், ‘சிவாஜிலிங்கம், ஆளுநரைப் பின்கதவால் சந்தித்தார்’ என செய்தி வெளியிட்டு இருந்தது. வடமாகாண ஆளுநரின் அலுவலகத்துக்குச் செல்வதற்கு, பின் வழியாக வாசல் இருக்கின்றதா என்பது எனக்குத் தெரியாது.

அதேபோல, அண்மையில் மற்றுமோர் ஊடகம், ஒரு பக்கத்தில் மேலே ‘ஏமாற்றப்பட்டார் சிவாஜிலிங்கம் டொட் டொட் டொட்’ என, தலையங்கத்துடன் செய்தி. அதன் கீழே, ‘மாடிப்படியில் இருந்து இறங்கி வர மறுத்த முதலமைச்சர்’ என தலையங்கத்துடன் ஒரு செய்தி. இரு செய்தி அறிக்கைகளுக்கும் தொடர்பில்லை. ஆனால், பக்கத்தின் தலையங்கத்தை மாத்திரம் வாசித்துச் செல்பவர்கள், ஏதோ சிவாஜிலிங்கம், முதலமைச்சருக்கு வெடி குண்டுடன் போய் நின்ற போது, முதலமைச்சர் கீழே வராமல் இருந்தார். அதனால் சிவாஜிலிங்கம் ஏமாற்றப்பட்டார் என விளங்கிக் கொள்ள கூடும். இவ்வாறு மொட்டந்தலைக்கும் முழங்கலுக்கும் ஊடகங்கள் முடிச்சு போடுகின்றன” எனவும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு