இந்திய பிரதித் தூதுவருடன் கூட்டமைப்பு எம்.பிக்கள் சந்திப்பு!

ஆசிரியர் - Editor IV
இந்திய பிரதித் தூதுவருடன் கூட்டமைப்பு எம்.பிக்கள் சந்திப்பு!

இலங்கைக்கான இந்தியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் ஜேக்கப்புக்கும்,தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று மாலை, கொழும்பு.3 இலுள்ள பிரதி உயர்ஸ்தானிகரின் வதிவிடத்தில் இடம்பெற்றது.

இச் சந்திப்பின் போது, தமது வாழ்வாதாரம் சிதைக்கப்படுவதற்கும், மாதகல் மற்றும், வத்திராயன் பகுதியில் சடலங்களாக கரையொதுங்கிய கடற்றொழிலாளர்களின் இறப்புக்கு நீதி கோரியும் வடமராட்சி, சுப்பர்மடம் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கடற்றொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைக்கு கூர்நோக்குடனான நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பு கடற்றொழிலாளர்களிடையே தொடர்ச்சியாக நிலவிவரும் இம்முரண்பாடுகள் ஈழத்தமிழர்களுக்கும், தாய்த்தமிழக உறவுகளுக்குமிடையே விரிசலை ஏற்படுத்துவதைத் தவிர்க்கும் முகமாக, இலங்கை கடற்றொழிலாளர்களின் கடல் எல்லைகளை வரையறை செய்வதற்கேனும் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்ற வேண்டுகோள் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலம் குறித்தும், தமிழ்மக்களின் ஏகோபித்த அரசியல் அபிலாசையான நிலையான அரசியற்தீர்வைப் பெறுவதில் ஏற்படுத்தப்படும் காலதாமதமானது, தமிழர்களின் நில உரித்துக்களை வன்பறிப்புச் செய்து, தமிழர்களின் இருப்பைக் கேள்விக்குட்படுத்தும் சமநேரத்தில் இந்தியாவின் அரசியல், இராஜதந்திர நகர்வுகளிலும் தாக்கம் செலுத்தக்கூடும் என்பதால், தமிழர்களுக்கான நிரந்தர அரசியல்தீர்வில் இந்தியாவின் வகிபாகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்தும் சிறப்பாகக் கலந்துரையாடப்பட்டது.

      

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு