தமது ஆழுகைக்குட்பட்ட பகுதிகளை சுத்தமாக வைத்திராத பிரதேசசபைகள், நகரசபைகள் மீது சட்ட நடவடிக்கை! ஆளுநர் பணிப்பு..
தமது ஆழுகைக்குட்பட்ட பகுதிகளை சுத்தமாக வைத்திருக்காத பிரதேசசபைகள், நகரசபைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படி வடமாகாண ஆளுநர் தனது செயலாளர் ஊடாக உள்ளுராட்சி ஆணையாளர் மற்றும் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்திருக்கின்றார்.
யாழ்.மாவட்டத்தில் உள்ள ஒரு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் தபால் நிலையத்திற்கும் வங்கிக்கும் இடைப்பட்ட பகுதியில் கழிவுநீர் தேங்கி நிக்கின்றமை தொடர்பில் புகைப்படத்துடன் ஆளுநருக்கு முறைப்பாடு சென்ற நிலையில் குறித்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
கிராம சபைகள் இயங்கிய காலத்தில் பிரதேச மட்டங்களில் கால்வாய்கள் உரிய முறையில் பாதுகாக்கபட்டதுடன் கழிவகற்றல்களும் உரிய முறையில் இடம்பெற்றது. ஆகவே பிரதேச சபைகளில் கழிவு முகாமைத்துவம் தொடர்பிலும் சுற்றுச்சூழல் தொடர்பிலும் பிரதேச சபையின் செயலாளர் உரிய கவனம் செலுத்த வேண்டும்.
அவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளாத சந்தர்ப்பத்தில் பொலிசார் உரிய சட்ட முறைகளை பின்பற்றி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு எழுத்து மூலம் ஆளுநர் பணிப்புரை விடுத்ததாக அறியக்கிடைத்தது.