பிரதி முதல்வரின் சிறுபிள்ளை தனமான செயற்பாடுகளை சகித்துக்கொள்ள முடியாது! யாழ்.மாநகர முதல்வர்..

ஆசிரியர் - Editor I
பிரதி முதல்வரின் சிறுபிள்ளை தனமான செயற்பாடுகளை சகித்துக்கொள்ள முடியாது! யாழ்.மாநகர முதல்வர்..

யாழ்.மாநகர பிரதி முதல்வர் எனது நம்பிக்கையை பெற்றவராக இருக்கவேண்டும். மாறாக நம்பிக்கையை கேள்விக்குட்படுத்தும் சிறுபிள்ளை தனமான காரியங்கள் செய்யும் ஒருவராக இருக்க முடியாது. என யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கூறியிருக்கின்றாார். 

யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், யாழ் மாநகர சபை முன்பாக அண்மையில் சபை உறுப்பினர்கள் சிலரால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் தொடர்பில் ஊடகவியலாளரொருவர் கேள்வியெழுப்பினார். 

அதற்கு பதிலளிக்கம்போதே யாழ்.மாநகர முதல்வர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், பொய்யைக் கூறி போராட்டங்களை மேற்கொள்வது உண்மையில் கவலைக்குரியது. 

பிரதி முதல்வர் பற்றி நான் எதுவும் கூறவில்லை. அண்மையில் நடந்த சபை அமர்வின்போது நான் ஒரு சில மணி நேரம் பங்குபற்றிவிட்டு ஆரியகுள புனரமைப்பு நிகழ்வுக்கான அழைப்பிதழ்களை வழங்குவதற்காக வெளியேறிவிட்டேன்.

அந்த நேரத்தில் பிரதிமுதல் வரை சபைக்குத் தலைமை தாங்குமாறு கூறிவிட்டே சென்றேன். நிகழ்ச்சி நிரலின் படி சபையை நடத்துங்கள். நிகழ்ச்சி நிரலில் இல்லாத விடயங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றே கூறியிருந்தேன். 

துரதிருஷ்டவசமாக நான் சென்ற பின்னர் என்னுடைய அனுமதியின்றி நிகழ்ச்சி நிரலில் இல்லாத விடயங்களைக் கையாண்டார்.மாநகர சட்ட ஏற்பாட்டின்படி நிகழ்ச்சிநிரலில் இல்லாத விடயங்களைச் சபையில் பேச முடியாது. 

திடீரென ஒரு விடயத்தைப் பேச வேண்டுமாக இருந்தால் அதனை மாநகர செயலாளர் மற்றும் முதல்வரின் அனுமதி பெற்றே செய்யவேண்டும். ஆனால் அந்த நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை.

அதனால் நான் சம்பந்தப்படாத விடயங்களில் என்னுடைய கையொப்பத்தை இடமுடியாதெனத் தெரிவித்தேன். இதனை நான் கூறியதால் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதே விடயத்தை இன்று சபையில் பேசுங்கள் 

நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ளது என்று உறுப்பினர்களிடம் நான் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டுச் சென்றுவிட்டனர். நான், மாநகர ஆணையாளர் 

மற்றும் எமது கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இல்லாத சமயத்தை இலாகவமாகப் பயன்படுத்தி முன்னர் எடுத்த தீர்மானங்களைக் கூட ரத்து செய்வதற்கு முயற்சித்திருக்கிறார்கள்.

ஆகவே இவ்வாறான சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. பிரதி முதல்வர் என்பவர் எனது நம்பிக்கையைப் பெற்றவராக இருக்க வேண்டும். அந்த நம்பிக்கையைக் கேள்விக்குட்படுத்துபவராக இருக்க முடியாது. 

என தெரிவித்துள்ளார்.

Radio